Veeramae Vaagai Soodum Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் வீரமே வாகை சூடும் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Veeramae Vaagai Soodum Movie Review in Tamil

வீரமே வாகை சூடும் திரை விமர்சனம்

Producer – விஷால் பிலிம் பேக்டரி
Director – து.ப.சரவணன்
Music – யுவன்ஷங்கர் ராஜா
Artists – விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு
Movie Time – 2 மணி நேரம் 46 நிமிடம்
Release Date – 4 பிப்ரவரி 2022

டீசர், டிரைலரைப் பார்த்த போது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால், அவற்றைப் பார்த்து ஏற்படும் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத்தான் தரும் என்பதை இந்தப் படமும் நிரூபித்திருக்கிறது. ஒரு முழுமையான ஆக்ஷன் படமாக இருக்கும் என்று படத்தின் டைட்டிலும் புரிய வைத்தது. ஆனால், இரண்டே முக்கால் மணி நேரம் எதற்கு இந்தப் படத்தை இப்படி இ….ழுத்து சொல்லியிருக்க வேண்டும் என்று அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் தான் சொல்ல வேண்டும்.

கான்ஸ்டபிள் மாரிமுத்துவின் மகன் விஷால். போலீஸ் வேலைக்காக காத்திருக்கிறார். விஷாலின் தங்கை ரவீணா ரவிக்கு அந்த ஏரியா ரவுயின் தம்பி அடிக்கடி காதல் தொந்தரவு தருகிறார். அதனால் சண்டையும் வருகிறது. இந்நிலையில் ரவீணா ரவி கொலை செய்யப்படுகிறார். தன் தங்கை ரவீணா கொலையில் வேறு ஏதோ விவகாரம் இருக்கிறது என சந்தேகப்படும் விஷால், போலீஸ் ஆவதற்கு முன் இந்த வழக்கை விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார். அதில் வாகை சூடினாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.

எமோஷனல், ஆக்ஷன் கதாபாத்திரத்தில் விஷால். அவரது கதாபாத்திரத்தின் பெயர் போரஸ். அந்தப்பெயர் ஏன் என்ற கேள்விக்கு கிளைமாக்சில் விடை தருகிறார்கள். இம்மாதிரி கதாபாத்திரம் எல்லாம் விஷலுக்கு சர்வ சாதாரணம். வழக்கம் போல் வெளுத்து வங்கியிருக்கிறார். குறிப்பாக விஷாலின் ஆக்ஷன் காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டர்கள் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்க வேண்டும் என நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு அடியிலேயே சண்டை போட வருபவர்கள் சுருண்டு விழுகிறார்கள். போரஸ் கதாபாத்திரத்தில் அப்படியே பிட் ஆகிறார் விஷால்.

படத்தில் விஷால் காதலியாக டிம்பிள் ஹயத்தி. ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ஒரு ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கிடைத்த ஒரு சில காட்சிகளில் மிரள வைக்கிறார், இப்படியும் ஒரு மகளா என்று.

விஷாலின் நண்பனாக யோகிபாபு. தேவைப்படும் காட்சிகளில் அவரை வர வைத்து படம் முழுவதும் இருப்பது போல் செய்திருக்கிறார்கள். அவ்வப்போது சிரிக்க வைக்கிறார், மற்ற படி தோழனுக்கு தோள் கொடுப்பவராக இருக்கிறார்.

வில்லனாக பாபுராஜ். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தனி வில்லனாக மிரட்ட முயற்சித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் நடித்திருக்க வேண்டிய கதாபாத்திரம். முடிந்தவரை முயற்சித்திருக்கிறார்.

விஷாலின் அப்பாவாக மாரிமுத்து, அம்மாவாக துளசி நடுத்தரக் குடும்பத்து பெற்றோர்களை கண்முன் நிறுத்துகிறார்கள்.

விஷாலின் தங்கையாக ரவீணா ரவி. நமது குடும்பத்தில் ஒருவராக, நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவராகத் தெரிகிறார். ஏரியா ரவுடியின் தம்பியிடம் சிக்கத் தவிக்கும் போது பரிதாப்பட வைக்கிறார். வில்லன்களிடம் தெரியாமல் சிக்கி, பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்துவிட்ட போது, அவர் மீதான பரிதாபம் இன்னும் அதிகமாகிறது.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரே ஒரு டூயட் பாடல் மட்டும் கொஞ்சமாக ரசிக்க வைக்கிறது. தனது பின்னணி இசையால் படத்திற்கு பரபரப்பூட்ட முயற்சித்திருக்கிறார். அதையும் மீறி சில காட்சிகள் மெதுவாக நகர்வதை என்னவென்று சொல்வது.

படத்தின் ஆரம்பத்தில் என்ன சொல்வது என இயக்குனர் தடுமாறியது தெரிகிறது. எதையெதையோ சொல்லிவிட்டு இடைவேளைக்கு சற்று முன்பாகத்தான் மெயின் கதைக்குள்ளேயே வருகிறார். இடைவேளைக்குப் பின்னும் சில தேவையற்ற காட்சிகள் இருந்தாலும் படம் கடந்துவிடுகிறது.

யாரோ ஒரு பெண்ணைக் கடத்துவதற்குப் பதிலாக அதில் விஷாலின் தங்கை சிக்கிக் கொள்வது, அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சில விதியின் விளையாட்டுகள் என சுவாரசிய முடிச்சைப் போட்டிருக்கிறார்கள். திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் உழைத்து படத்தில் ஒரு அரை மணி நேரத்தைத் தூக்கியிருந்தால் வீரமாக வாகை சூடியிருக்கும்.

Reference: Cinema Dinamalar