Pandrikku Nandri Solli Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் பன்றிக்கு நன்றி சொல்லி படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Pandrikku Nandri Solli Movie Review in Tamil

பன்றிக்கு நன்றி சொல்லி திரை விமர்சனம்

Producer – ஹெட் மீடியா ஒர்க்ஸ்
Director – பாலா அரண்
Music – சுரேன் விகாஷ்
Artists – நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்னம்
Release Date – 4 பிப்ரவரி 2022 (ஓடிடி)
Movie Time – 1 மணி நேரம் 41 நிமிடம்

டிஜிட்டலுக்கு சினிமா மாறிய பின் பல புது படைப்பாளிகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார்கள். விதவிதமான கதைகளுடன் நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் புதுமுகங்களை வைத்து கூட ஓரளவிற்கு தரமான படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ‘பன்றிக்கு நன்றி சொல்லி‘ சில இளைஞர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட படம். ஓரளவிற்கு என்பதையும் தாண்டி தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் நன்று மிக நன்று என்று சொல்லியிருக்கலாம்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறிய பன்றி சிலை ஒன்று சீன தேசத்தில் இருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதை ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் கண்டுபிடித்து எடுத்துச் செல்கிறார். செல்லும் வழியில் சிலை கடத்தல் கும்பல் ஒன்று அதைக் கைப்பற்றிச் செல்கிறது. அவர்களிடமிருந்து இரண்டு இளைஞர்கள் அதைத் திருடிச் செல்கிறார்கள். அவர்கள் அதை ஒரு இடத்தில் ஒளித்து வைக்கிறார்கள். பின்னர் அவர்களும் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அந்த சிலை பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொண்ட ரவுடி விஜய் சத்யா, போலீஸ் அதிகாரி பாலாஜி ரத்தினம் பன்றி சிலையைக் கைப்பற்றப் போட்டி போடுகிறார்கள். அவர்களுடன் சினிமாவில் இயக்குனராகப் போராடும் நிஷாந்தும் விதியின் விளையாட்டில் உள்ளே வருகிறார். சில பல போராட்டங்களுக்குப் பிறகு அந்த சிலையை யார் கைப்பற்றினார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை!

இந்தக் காலத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லாத ஒரு திரைப்படமா? என ஆச்சரியப்பட வைத்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் பாலா அரண் பரபரப்பான சம்பவங்களை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி, அதை சரியான லொகேஷன்களில் படமாக்கியிருக்கிறார். பட உருவாக்க விதத்தில் பாஸ் மார்க்கும் அதிகம் வாங்கிவிடுகிறார். ஆனால், பிளாக் காமெடிப் படம் என்று சொல்லப்பட்ட படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே காமெடியைப் புகுத்தியிருக்கிறார். அதைப் படம் முழுவதும் வைத்திருந்தால் சொல்லி சொல்லி பாராட்டியிருக்கலாம்.

படத்தில் கதாநாயகன் என்று யாரையும் தனியாக சொல்ல முடியாது. சினிமாவில் இயக்குனராக சேரப் போராடும் நிஷாந்த், ரவுடி விஜய் சத்யா, போலீஸ் அதிகாரி பாலாஜி ரத்தினம் ஆகிய மூவருமே படத்தின் ஹீரோக்கள்தான். மூவருக்குமே அந்த பன்றி சிலையைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அவர்களுக்கு சொந்தமில்லாத பொருள் மீது ஆசைப்படுபவர்கள். அதை அடைய கொலை மட்டும் செய்யாமல் மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

இவர்களது நடிப்பு மட்டுமல்ல படத்தில் பாலாஜிக்கு உதவி செய்யும் மற்றொரு போலீசான செல்லா, விஜய் சத்யாவுக்கு தப்புத் தப்பாக உதவி செய்யும் அந்த இளைஞர், நிஷாந்துக்கு உதவு செய்யும் அந்த ‘ஜி’ நண்பர் என அவர்களும் கூட தங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தில் குறிப்பிட வேண்டிய அம்சன் படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட லொகேஷன்கள். அவையே அந்தந்த காட்சிகளை இன்னும் கொஞ்சம் உயர்த்திக் காட்டுகிறது. குறிப்பாக அந்த பாழடைந்த கம்பெனி. அனைவருடனும் ஓடி ஓடியே படமாக்கியிருப்பார் போலிருக்கிறது ஒளிப்பதிவாளர் விக்னேஷ் செல்வராஜ். பின்னணி இசையிலும், ‘பன்றிக்கு‘ பாடலிலும் இசையமைப்பாளர் சுரேன் விகாஷ் உழைப்பு தெரிகிறது. எடிட்டர்கள் ராம், சதீஷ் இருவரும் படத்தை நீட்டி இழுக்காமல் தேவையானவற்றை மட்டும் சேர்த்து விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இளைஞர்களின் முதல் முயற்சி என்பதால் சில பல குறைகள் இருந்தாலும் தங்கள் கதையையும், கதாபாத்திரங்களையும் நம்பி படமெடுத்தற்காகப் பாராட்டலாம். அடுத்தடுத்த படங்களில் ரசிகர்கள் விரும்பும் சினிமாவைத் தர இன்னும் கற்றுக் கொள்வார்கள் என்று நம்பலாம்.

Reference: Cinema Dinamalar