தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையத் தொடர் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Tamil Rockerz Web Series review in Tamil

தமிழ் ராக்கர்ஸ் இணையத் தொடர் விமர்சனம்

Tamilrockers Production – ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்
Tamilrockers Director – அறிவழகன்
Tamilrockers Music Director – குமார் ராமசுவாமி
Tamilrockers Artists – அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன்
Tamilrockers Release Date – 19 ஆகஸ்ட் 2022 (சோனி லிவ்)
Tamilrockers Episodes – 8

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இணையத் தொடர் தமிழ் ராக்கர்ஸ். அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரும் சவாலாக விளங்கிய பைரசி இணையதளமான ‘தமிழ் ராக்கர்ஸ்’ கூட்டத்தைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான அருண் விஜய் முயற்சிப்பதுதான் இத் தொடரின் கதை. அவர்கள் எப்படியெல்லாம் ஒரு படத்தை இணையதளத்தில் பதிவேற்றுவார்கள் என்பதை கற்பனை கலந்த கதையாகக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் சில உண்மையும் இருக்கலாம்.

‘ஈரம், குற்றம் 23’ படங்களை இயக்கிய அறிவழகன் அப்படங்களை ஒரு பரபரப்பான த்ரில்லர் படங்களாகக் கொடுத்து ரசிக்க வைத்தவர். அவரது இயக்கத்தில் வரும் தொடர் என்பதால் டிரைலரைப் பார்த்ததும் இத்தொடரின் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை சற்றே ஏமாற்றத்துடன்தான் பூர்த்தி செய்திருக்கிறார் அறிவழகன். எட்டு அத்தியாயங்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக மையக் கதையிலிருந்து விலகி கிளைக் கதைகளைத் தேவையற்று நீட்டித்திருக்கிறார்கள். அதைத் தவிர்த்து மையக் கதையுடன் பயணப்படும் திரைக்கதையை அமைத்திருந்தால் இன்னும் பரபரப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் சொல்லப்படாத ஒரு கதை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

‘அதிரடி ஸ்டார்’ என அழைக்கப்படும் ஆதித்யா என்ற நடிகரின் 300 கோடி ரூபாய் படமான ‘கருடா’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்தப் படத்தைத் தியேட்டர்களில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே தங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம் என அறிவிக்கிறது தமிழ் ராக்கர்ஸ். அதைத் தடுக்க வேண்டும் என உதவி போலீஸ் கமிஷனரான அருண் விஜய் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்கிறார் டிஐஜி. அருண் விஜய், அவருக்கு உதவி செய்ய சைபர் கிரைம் குழுவிலிருந்து வாணி போஜன், வினோதினி வைத்யநாதன், வினோத் சாகர் அடங்கிய குழு விசாரணையில் இறங்குகிறது. தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பால் திரையுலகமே பரபரப்பாகிறது. அருண் விஜய் தலைமையிலான குழு தமிழ் ராக்கர்ஸ் யார் ?, ‘கருடா’ படத்தை அவர்கள் வெளியிடுவதைத் தடுத்தார்களா இல்லையா என்பதுதான் தொடரின் மீதிக் கதை.

அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘குற்றம் 23’ படத்திலேயே அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துக் கவர்ந்திருந்தார். அது போலவே இத்தொடரிலும் அருண் விஜய்யின் நடிப்பு அதே கம்பீரத்துடன் அமைந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் குழுவைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என தீவிரமாகக் களத்தில் இறங்கி எங்கெங்கோ தேடி அலைகிறார். காக்கிக் சட்டை அணியாமலேயே காவல் துறை அதிகாரிக்குரிய உடல்மொழியும், பேச்சும் தொடர் முழுவதும் அமைந்துள்ளது.

அருண் விஜய்க்கு உதவி செய்யும் முக்கிய சைபர் கிரைம் அதிகாரியாக வாணி போஜன். டெக்னிக்கலாக சைபர் குற்றங்கள் பற்றிய திறமை மிக்கவராக இருக்கிறார். வினோதினி, வினோத் சாகர் ஆகியோரும் தொடர் முழுவதுமே இடம் பெற்று அவர்களுடைய பங்கையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளராக அழகம் பெருமாள். அவரைப் போல இருப்பவர்களும் இங்கு இருக்கிறார்கள். அதிரடி ஸ்டார் ஆதித்யா என அடிக்கடி காட்டுகிறார்கள். ஆனால், அவருடைய முகத்தைக் காட்டாமலேயே இன்றைய முன்னணி நடிகர் ஒருவரை ஞாபகப்படுத்துகிறார்கள். அந்த நடிகரின் அப்பாவாக ரிட்டயர்டு ஆன திரைப்பட இயக்குனராக குமார் நடராஜன். அதிரடி ஸ்டாரின் தீவிர ரசிகனாக ‘காக்கா முட்டை’ ரமேஷ், தமிழ் ராக்கர்ஸ் குழுவுக்காக வேலை செய்யும் ஒரு இளைஞனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ், வாணி போஜன் அப்பாவாக சினிமா தயாரிப்பாளராக இருந்து மனநலம் பாதிக்கப்பட்டவராக எம்எஸ் பாஸ்கர், தயாரிப்பாளர் அழகம் பெருமாள் கார் டிரைவராக மாரிமுத்து என பல கதாபாத்திரங்கள் தொடரில் உண்டு.

அருண்விஜய்யின் மனைவியாக ஐஸ்வர்யா மேனன். ஆரம்ப அத்தியாயங்களில் மட்டும் வருகிறார். அவரை யாரோ கடத்திச் சென்று கொலை செய்துவிடுகிறார்கள். அந்தக் கொலைக்கும் தமிழ் ராக்கர்ஸுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்றுதான் விசாரணையில் இறங்குகிறார் அருண் விஜய். தமிழ் ராக்கர்ஸ் குழுத் தலைவனாக தருண் குமார். அவருக்கு உதவியாக சிலர். எப்படியாவது ‘கருடா’ படத்தை தியேட்டர்களுக்கு முன்பாக தங்கள் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியிட வேண்டும் என என்னென்னமோ செய்கிறார்கள். அந்தக் காட்சிகள் பரபரப்பானவை.

இரவு நேரக் காட்சிகள் தொடரில் நிறைய இருக்கிறது. ஒரு படத்திற்குரிய ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜசேகர். எடிட்டர் சாபு ஜோசப் காட்சிகளின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக இன்னும் உழைத்திருக்கலாம்.

இணையத் தொடர் என்றாலே ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பம் முதலே அடுத்து என்ன என்ற பரபரப்புடன் நகர வேண்டும் என ஓடிடி ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த தமிழ் ராக்கர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக டேக் ஆப் ஆகிறது.