திருச்சிற்றம்பலம்,Thiruchitrabalam

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் திருச்சிற்றம்பலம் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Thiruchitrabalam Movie Review in Tamil

திருச்சிற்றம்பலம் திரை விமர்சனம்

Thiruchitrabalam Movie Director – மித்ரன் ஆர் ஜவஹர்
Thiruchitrabalam Movie Music Director – அனிருத்
Thiruchitrabalam Movie Artists – தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர்
Thiruchitrabalam Movie Release Date – 18 ஆகஸ்ட் 2022
Thiruchitrabalam Movie Running Time – 2 மணி நேரம் 13 நிமிடம்

ஆண்களின் காதலைத்தான் தமிழ் சினிமாக்கள் அதிகம் சொல்லியிருக்கின்றன. சொல்லப்படாத பெண்களில் காதல் எவ்வளவோ உண்டு. இந்த ‘திருச்சிற்றம்பலம்’ மறைக்கப்பட்ட ஒரு பெண்ணின் காதல் கதையாக சுவாரசியமும், காதலுமாகக் கலந்து ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார். இடைவெளி என்பதால் அவரிடம் ஒரு புத்துணர்வு தெரிகிறது. அது படத்திலும் எதிரொலித்துள்ளது.

தாத்தா பாரதிராஜா, மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் ஒரே வீட்டில் வசித்தாலும் அப்பா மகனான பிரகாஷ்ராஜும், தனுஷும் பத்து வருடங்களுக்கு மேலாக பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு விபத்தில் தனுஷின் அம்மாவும், தங்கையும் இறந்து போனதே அதற்குக் காரணம். தனுஷும், கீழ் பிளாட்டில் வசிக்கும் நித்யா மேனனும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். தனுஷுக்கு ஹை பை பெண்ணான ராஷி கண்ணா மீது காதல், ஓரிரு நாளில் அது நிறைவோமலே போகிறது. அடுத்து கிராமத்துப் பெண்ணான பிரியா பவானி சங்கர் மீது காதல், அது ஒரே நாளிலேயே ‘கட்’ ஆகிவிடுகிறது. நித்யா மேனன்தான் உனக்கு பொருத்தமான ஜோடி என தாத்தா பாரதிராஜா சொல்ல அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

முக்கிய கதாபாத்திரங்களை பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மித்ரன். அனைவரையும் விட தன்னுடைய மிக இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்து முழு படத்தையும் தாங்குகிறார் நித்யா மேனன். இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய தனுஷையும் தாண்டிவிட்டார் என்றும் சொல்லலாம். இப்படி ஒரு தோழி தங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என 90ஸ் கிட்ஸ்கள் பலரது ஆசை, கனவாக இருக்கும். அப்படி ஒரு கனவுத் தோழியை கண்முன் காட்டியிருக்கிறார் நித்யா மேனன். கிளைமாக்சுக்கு முன்பாக அவர் பொங்கி அழும் காட்சிகள் காதலில் விழுந்த அனைவரையும் கலங்க வைக்கும். நினைத்துப் பார்க்க முடியாத நடிப்பு, நட்பு நித்யா மேனனுடையது.

தமிழில் இதற்கு முன்பு ‘ஜகமே தந்திரம், மாறன்’ என வேறு தடத்தில் பயணித்து ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ் மீண்டும் சரியான தடத்திற்குத் திரும்பியிருக்கிறார். இதுதான் தனுஷுக்கான களம். இப்படியான தனுஷைத்தான் பலருக்கும் பிடிக்கும். நம் பக்கத்து வீட்டுப் பையன் தான் திருச்சிற்றம்பலம் என சொல்லும் அளவிற்கு முதல் காட்சியிலேயே நெருக்கமாகிவிடுகிறார். ராஷிகண்ணாவின் ‘பிளர்ட்’, பிரியா பவானி சங்கரின் ‘வீட்ல பார்த்தா கொன்னுடுவாங்க’ என இரண்டு விதமான காதல்களைக் கடந்து வரும் கதாபாத்திரம். நம் அருகில் இருப்பவர்களின் அருமை நம் கண்களை அடிக்கடி மறைக்கும் என்று சொல்வார்கள். அது தனுஷுக்கும் இப்படத்தில் நடக்கிறது. ஹீரோயிசம் என்றெல்லாம் வழக்கமான சினிமா போல இல்லாமல் தனுஷ் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

மாடர்னான, ஹை பை பெண்ணாக ராஷி கண்ணா. தனுஷுடன் சிறு வயதில் ஒன்றாகப் படித்தவர். தனுஷ் அவர் மீது காதலில் விழ, அது காதல் இல்ல ‘பிளர்ட்'(விளையாட்டுதனமான காதல்) மட்டும்தான் எனச் சொல்லி விலகுகிறார் ராஷி. அது ஒரு விதம் என்றால் மற்றொரு விதம் பிரியா பவானி சங்கர் கதாபாத்திரம் போன்றது. ஓரிரு காட்சிகள்தான் என்றாலும் கிராமத்துப் பக்கம் பெண்களின் காதல் பார்வை எப்படியிருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஒரு படத்திலேயே மூன்று விதமான பெண்கள், குணாதிசயங்கள், அவர்களது காதல் என இந்தக் கால இளைஞர்களுக்கு ஒரு காதல் பாடத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

தனுஷின் தாத்தாவாக பாரதிராஜா. தாத்தா, பேரன் இருவருமே ஒன்றாக ‘பீர்’ குடிப்பதெல்லாம் ஓவர். பேரனுக்கு அடிக்கடி வாழ்க்கையின் பரிமாணங்களைப் புரிய வைக்கும் தாத்தாவாக பாரதிராஜா. தனுஷ் அப்பாவாக இன்ஸ்பெக்டராக பிரகாஷ்ராஜ். அவருக்கான முக்கியத்துவம் கொஞ்சம் குறைவுதான். அப்பா, மகனுக்கிடையில் அவர் கதாபாத்திரம் சிக்கிவிட்டது.

படத்தில் நகைச்சுவைக்கென்று தனியாக யாரும் இல்லை. முக்கிய கதாபாத்திரங்களே அவ்வப்போது டைமிங் வசனங்களைப் பேசி சிரிக்க வைத்துவிடுகிறார்கள். இடைவேளைக்குப் பின் தனுஷ் குடும்பத்தின் கிராமத்துப் பயணம் ‘டைவர்ட்’ ஆகிப் போகிறது. ஆனாலும், அங்கு ஒரு காதல் கதையைக் காட்டி கதையை ஓட்டி இருக்கிறார்கள். பின்னர்தான் மீண்டு வந்து சரியாக முடிகிறது.

அனிருத் – தனுஷ் கூட்டணி என்றாலே பாடல்கள் பட்டையைக் கிளப்பும். நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து கூட்டணி பாடல்களில் திருப்தி தரவில்லை. ‘தாய் கிழவி’ மட்டும் கொஞ்சம் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை அனைத்தையும் இதற்கு முன்பு கேட்ட ஒரு பீலிங்.

தேவையற்ற சண்டை, பிரம்மாண்டம், ஆபாசம் இல்லாமல் ஒரு யதார்த்த காதல் பிளஸ் குடும்பக் கதையாக இருப்பது ரசிக்க வைக்கிறது.