சீதா ராமம்,Sita Ramam

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் சீதா ராமம் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Sita Ramam Movie Review in Tamil

சீதா ராமம் திரை விமர்சனம்

Sita Ramam Movie Production – வைஜெயந்தி மூவீஸ்
Sita Ramam Movie Director – ஹனு ராகவபுடி
Sita Ramam Movie Music Director – விஷால் சந்திரசேகர்
Sita Ramam Movie Artists – துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா
Sita Ramam Movie Release Date – 5 ஆகஸ்ட் 2022
Sita Ramam Movie Running Time – 2 மணி நேரம் 43 நிமிடம்

‘பீல் குட் லவ் ஸ்டோரி, வாட் எ ரொமான்டிக் லவ் ஸ்டோரி, அழகான காதல் கதை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனம் கவர்ந்த காதல் படம்,’ என பலரும் பலவிதமாக தங்கள் மனம் கவர்ந்த காதல் திரைப்படங்களைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். அப்படி பாராட்டும்படியான ஒரு படம்தான் இந்த ‘சீதா ராமம்’.

தெலுங்கில் தயாரான ஒரு படத்தைத் தமிழ் ரசிகர்களும் ரசிக்கும் விதமாக ஒரு நேரடித் தமிழ்ப் படம் போலவே கொடுத்திருக்கிறார்கள். வசனங்கள், பாடல்கள் இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வை சிறிதும் ஏற்படுத்தவில்லை. சில காட்சிகளில் உதட்டசைவும், வசனங்களும் கூட அவ்வளவு பொருத்தமாய் அமைந்திருக்கிறது.

இயக்குனர் ஹனு ராகவபுடி கதையில் மட்டும் கவனம் செலுத்தாமல், காட்சியமைப்புகளில், கதாபாத்திரங்களில், அதற்கான தேர்வுகளில் என அனைத்திலும் தனி கவனம் செலுத்தி ஒரு அற்புதமான காதல் திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என பலருக்கும் பாடமாக இருக்கும்படியாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார். சமீப காலங்களில் பிரம்மாண்டத்தின் மூலமே ரசிகர்களைக் கவர்ந்த சில தெலுங்கு இயக்குனர்களுக்கு தனது கதை சொல்லல் மூலம் அவர்களை விடவும் உயர்ந்து நிற்கிறார் ஹனு ராகவபுடி.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரிகேடியரான சச்சின் கடேகர், இறப்பதற்கு முன்பாக ஒரு கடிதத்தையும், ஒரு பெட்டகத்தையும் இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமி என்ற பெண்ணிடம் சென்று சேர்க்கும்படி சொன்னதால் அவரது பேத்தி ராஷ்மிகா அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு இந்தியா வருகிறார். நண்பர் ஒருவர் உதவியுடன் முகவரியே இல்லாத யார் அந்த சீதா மகாலட்சுமி என தேட ஆரம்பிக்கிறார். அந்தப் பயணத்தில் சீதா மகாலட்சுமிக்கும் (மிருணாள் தாக்கூர்), இந்திய ராணுவ லெப்டினன்ட் ராமிற்கும் (துல்கர் சல்மான்) இடையிலான 20 வருடத்திற்கு முந்தைய காதலைப் பற்றித் தெரிந்து கொள்கிறார். தாத்தாவின் ஆசைப்படி கடிதத்தை அவர் சேர்த்தாரா, ராம் என்ன ஆனார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

80களில் நடக்கும் கதையாகவும், 60களில் நடக்கும் கதையாகவும் அந்தந்தக் கால கட்டங்களுக்கே நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குனர் ஹனு. அதற்கு உதவியாக ஒளிப்பதிவாளர்கள் வினோத், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, கலை இயக்குனர் வைஷ்ணவி ரெட்டி, பைசல் அலிகான் ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

வாவ்….என்ன ஒரு நடிப்பு என சொல்ல வைத்திருக்கிறார்கள் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர். மலையாள ஹீரோக்களுக்கென ஒரு தனித் திறமை உண்டு. எந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்களோ, அதற்குப் பொருத்தமாக தங்களை அப்படியே மாற்றிக் கொள்வார்கள். இந்தப் படத்தில் ராம் என்ற லெப்டினென்ட்டாக துல்கரின் நடிப்பில் ஒரு துள்ளல் படம் முழுவதும் இருக்கிறது. காதலில் விழுந்த ஒருவன் எப்படியெல்லாம் மாறிப் போவான் என்பதை அப்படியே காட்டியிருக்கிறார் துல்கர்.

சீதா மகாலட்சுமி என்கிற ஐதராபாத் இளவரசி நூர்ஜகான் ஆக மிருணாள் தாக்கூர். சீதா மகாலட்சுமிதான் இவர் என நாம் மிருணாளை ரசித்துக் கொண்டிருக்க, திடீரென அவர்தான் ஐதராபாத் இளவரசி நூர்ஜகான் என ஒரு எதிர்பாராத திருப்பதைத் தருகிறார் இயக்குனர். மிருணாளின் நடிப்பு ஒரு பக்கம் நம்மை ரசிக்க வைத்தாலும் மறுபக்கம் அவருக்கான பொருத்தமான ஆடைகளைத் தேர்வு செய்ததற்காக ஷீத்தல் ஷர்மாவிற்கு தனி பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு அழகாய்த் தெரிகிறார் மிருணாள். இன்னும் கொஞ்ச காலத்திற்கு தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாகவும் வருவதற்கான எதிர்காலம் உண்டு.

துல்கர், மிருணாள் இருவருக்கும் இடையிலான காதலைப் பற்றிச் சொல்லும் முக்கியத்துவம் கொண்ட படத்தில் இரண்டாம் கதாநாயகி போல நடிப்பதற்கு பெரிய மனது வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா. இருப்பினும் கதையை நகர்த்திப் போவதில் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பெரும் பங்குண்டு.

மற்ற கதாபாத்திரங்களில் ஒரு சில காட்சிகளாக இருந்தாலும் முக்கியமான நடிகர்களையே நடிக்க வைத்துள்ளனர். பிரிகேடியர் ஆக பிரகாஷ்ராஜ், மேஜர் ஆக கவுதம் வாசுதேவன் மேனன், துல்கர் மீது அடிக்கடி வெறுப்பு காட்டும் சக ராணுவ அதிகாரியாக சுமந்த் நடித்திருக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. பாடல்களை அதிகபட்ச அழகுணர்ச்சியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் கிளைமாக்சில் நாம் எதிர்பார்க்காத சில திருப்பங்கள் நடக்கின்றன. சீதாவும், ராமும் இணைந்தார்களா இல்லையா என்பதை கடைசி வரை ஒரு எதிர்பார்ப்புடன் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வதும், படத்தின் நீளமும்தான் படத்தில் குறையாகத் தெரிகின்றன. பிரம்மாண்டம், ஆக்ஷன், குழந்தை கடத்தல் என போரடித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு இந்த ‘சீதா ராமம்’ ஒரு மாறுபட்ட ரசனையைத் தரும்.

Reference: Cinema Dinamalar