என்னா தான் கேஸ் கொடு (மலையாளம்),Enna thaan case kodu

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் என்னா தான் கேஸ் கொடு (மலையாளம்) படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Nna, Thaan Case Kodu Movie Review in Tamil

என்னா தான் கேஸ் கொடு (மலையாளம்) திரை விமர்சனம்

Nna, Thaan Case Kodu Movie Production : சந்தோஷ் குருவில்லா
Nna, Thaan Case Kodu Movie Director : ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால்
Nna, Thaan Case Kodu Movie Music Director : டான் வின்சென்ட்
Nna, Thaan Case Kodu Movie Artists : குஞ்சாக்கோ போபன், காயத்ரி, குன்ஹி கிருஷ்ணன், மற்றும் பலர்
Nna, Thaan Case Kodu Movie Release Date : 11.08.2022
Nna, Thaan Case Kodu Movie Running Time : 2 மணி 19 நிமிடம்

மனிதனுக்கும் ரோபோவுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. இதில் பொதுமக்களின் பிரச்சனை ஒன்றை அரசியல் நையாண்டி கலந்து படமாக்கியுள்ளார்.

சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடுபவர் குஞ்சாக்கோ போபன். அவரது மனைவி காயத்ரி.. ஒருநாள் இரவு நடந்து செல்லும்போது வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தன்மீது மோதுவதை தவிர்க்க, அருகில் இருந்த எம்எல்ஏ வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதிக்கிறார் குஞ்சாக்கோ. அப்போது அங்கு காவலுக்கு இருந்த நாய்களிடம் கடிபடுகிறார். மேலும் எம்எல்ஏ வீட்டில் திருட முயற்சித்ததாக அவர் மீது வழக்கும் பதியப்படுகிறது.

ஆனால் தான் திருட வரவில்லை என்பதை நிரூபிக்க ஆட்டோ டிரைவரை சாட்சிக்கு அழைகிறார். அவரோ தன் பின்னால் வந்த வேன் மோதியதால் தான் தனது ஆட்டோ குஞ்சாக்கோ மீது மோதுவது போல வந்தது என்கிறார். வேன் டிரைவரோ, சாலையில் திடீரென சைக்கிள்காரர் குறுக்கே வந்ததால் அதை தவிர்க்க வண்டியை திருப்பியபோது சாலையில் இருந்த குழியில் வண்டி இறங்கியதால் தான் ஆட்டோ மீது மோதியதாக தன் தரப்பு நியாயத்தை பேசுகிறார். இதையடுத்து பள்ளத்தை மூடாமல் விட்ட நகராட்சி, அந்த பணியை செய்யவிடாமல் நகராட்சி காண்ட்ராக்டை தடுத்து நிறுத்திய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது வழக்கு தொடுக்கிறார் குஞ்சாக்கோ போபன்.

அமைச்சரோ எப்போது மேடையில் பேசினாலும் ‘என்னா.. தான் கேஸ் கொடு’ (என்னா இப்போ.. வேணும்னா நீ கேஸ் போடு) என யாரையும் தெனாவெட்டாக பேசும் நபர்.. அவர் சார்பாக சீனியர் வழக்கறிஞர்கள் ஆஜராக, குஞ்சாக்கோ போபனோ சாதாரண ஒரு வழக்கறிஞருடன் தனது தரப்பு நியாயங்களுக்காக போராடுகிறார். எளிய மனிதனின் போராட்டத்தால் அதிகாரத்தில் இருப்பவரை அசைக்க முடிந்ததா.? நீதி அவர் பக்கம் நின்றதா என்பது மீதிக்கதை.

ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக (இப்போதும் கூடத்தான்) அழைக்கப்பட்ட குஞ்சாக்கோ போபனா இது ஆச்சர்யப்படும் விதமாக சாதாரண கடைக்கோடி கிராமத்து மனிதனாக, கருமை படிந்த முகமும் அதில் எப்போதும் குடியிருக்கும் அப்பாவித்தனமுமாக படம் நெடுக ராஜீவன் என்கிற அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். கிராமத்து திருவிழாவில் பாடப்படும் மேடை பாடலுக்கு அவர் ஆடும் நடனம் இருக்கிறதே.. அட அடா.. தெறிக்க விடுகிறார்.. நாய்கள் தனது பின்பக்கத்தை கடித்த பின், பல காட்சிகளில் காலை நொண்டியவாறு நடப்பது, பஸ், வேன் இருக்கைகளில் அமரக்கூட முடியாமல் நின்றபடி பயணிப்பது என பல காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிறார்.. தனது தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்காக வழக்கறிஞரை அவர் கன்னத்தில் அறையும் காட்சியும் அதற்கு அவர் கொடுக்கும் விளக்கமும் கைதட்டலை அள்ளுகிறது.

குஞ்சாக்கோவின் தாலிகட்டாத மனைவியாக, அப்பாவி பெண்ணாக சாந்த முகம் காட்டுகிறார் காயத்ரி.. குஞ்சாக்கோ நாய் கடித்து மருத்துவமனையில் குப்புற படுத்துக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ‘பாதி …. போச்சே மாமா’ என அங்கலாய்ப்பது செம காமெடி. அதேபோல நீதிமன்றத்தில் மந்திரிக்கு உடம்பு சரியில்லைன்னா மட்டும் தேதிய தள்ளி வைக்கிறீங்க என நீதிபதியையே கேள்வி கேட்டு அலறவிடுவதிலும் சரவெடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் காயத்ரி, படம் முழுதும் தமிழிலேயே தான் பேசுகிறார்.

இவர்கள் இருவரையும் தாண்டி நீதிபதியாக வரும் பிபி.குன்ஹி கிருஷ்ணன் காமெடியும் கறாரும் கலந்த நடிப்பால் படம் முழுதும் ரசிகர்களை தன் பக்கம் வசியப்படுத்தி விடுகிறார். கோர்ட்டுக்கு வரும் அமைச்சரை பார்த்து அவர் பம்முகிறாரோ என நினைக்கும் வேளையில், அதிரடி உத்தரவால் அவரையே ஆட்டம் காண வைக்கும்போது, எளிய மனிதர்களுக்காகத்தான் நீதிமன்றங்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் மனிதர்.

குஞ்சாக்கோ, காயத்ரி இருவரை தவிர அனைவரும் புதுமுகங்களே.. ஆனாலும் போலீஸ் கான்ஸ்டபிள், குஞ்சாக்கோவின் வக்கீல், அமைச்சர், அவரது தரப்பு வக்கீல் என பலரும் எந்த இடத்திலும் சோடை போகாத நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக ஆட்டோ ட்ரைவர் மற்றும் அவரது காதலி இருவரின் காதல் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன.

சாலையோரம் மூடப்படாமல் கிடக்கும் குழியால் தினந்தோறும் எத்தனையோ விபத்துக்கள் நடப்பதாக செய்தித்தாள்களில் பார்த்துவிட்டு கடந்து செல்கிறோம். அதன் பின்னணியில் உள்ள அரசியல், அதனால் பாதிக்கப்படும் எளிய மனிதர்களின் வாழ்வியல் என கலந்துகட்டி அரசியல் நையாண்டி மேளா நடத்தியுள்ளார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால். படத்தின் பாதி காட்சிகள் நீதிமன்ற அறைக்குள்ளேயே நடந்தாலும், அனைத்தையும் ரசிகும்படியாக போரடிக்காமல் கொண்டு சென்றுள்ள நேர்த்தியை நிச்சயமாக பாராட்டியே ஆகவேண்டும்.

Reference: Cinema Dinamalar