குதிரைவால்,KuthiraiVaal

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் குதிரைவால் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Kuthiraivaal Movie Review in Tamil

குதிரைவால் திரை விமர்சனம்

Produuction – யாழி பிலிம்ஸ், நீலம் புரொடக்ஷன்ஸ்
Directors – மனோஜ் லயனல் ஜேசன், ஷ்யாம் சுந்தர்
Music – பிரதீப் குமார், மார்ட்டென் விசர்
Artists – கலையரசன், அஞ்சலி பாட்டீல்
Release Date – 18 மார்ச் 2022
Running Time – 2 மணி நேரம் 5 நிமிடம்

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட வெகுஜன ஊடகம். இங்கு மக்களுக்காக எடுக்கப்படும் படங்கள் தான் வியாபார ரீதியாக அதிகம் வெற்றி பெறுகின்றன. ரசனை ரீதியாக எடுக்கப்படும் படங்கள் பெயரை வாங்குகின்றன. இரண்டிலுமே அபூர்வமாய் எப்போதோ ஒரு முறை மாறுபட்டும் நடக்கிறது.

இந்த ‘குதிரைவால்’ படம் நிச்சயம் மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள படம் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கான படம் என்று வேண்டுமானால் தாராளமாகச் சொல்லலாம். சாமானிய திரைப்பட ரசிகர்களால் இந்தப் படத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

மனோஜ் லயனல் ஜேசன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கத்தை மட்டுமே செய்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் ராஜேஷ். இம்மாதிரியான ஒரு கதையை எப்படி யோசிக்கிறார்கள் என்று பலருக்குத் தோன்றும். ராஜேஷ் பேப்பர்களில் எழுதியதை அப்படியே திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல. தத்துவார்த்தமான ஒரு படம், எத்தனை பேருக்குப் போய்ச் சேரும் என்பதுதான் கேள்வி.

வங்கி ஒன்றில் வேலை பார்ப்பவர் கலையரசன். ஒரு நாள் தூங்கி எழுந்து பார்த்தால் அவருக்கு குதிரை வால் ஒன்று முளைத்திருக்கிறது. தனக்கு ஏன் வால் வந்தது என்பது குறித்து கனவுகளுக்கு அர்த்தம் சொல்லும் ஒரு பாட்டி, கணக்கு மூலம் எதற்கும் தீர்வு உண்டு என்று சொல்லும் ஒரு கணித ஆசிரியர், ஜோசியம் பார்க்கும் ஒருவர் ஆகியோரிடம் சென்று ஆலோசனை கேட்கிறார். தனக்கு கனவில் ஏதோ ஒன்று நடந்தது என்பது குறித்து உணரும் கலையசரன் அதற்கான தேடலைச் செய்கிறார். அவரது சந்தேகங்களுக்கு விடை கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஒரு குழப்பமான மன நிலை கொண்டவராக கலையசரன். இப்படியான கதாபாத்திரத்தை திரையில் யதார்த்தமாய் கொண்டு வருவதற்கு நிறைய மெனக்கெடல் வேண்டும். அதை சிறப்பாய் செய்திருக்கிறார் கலையரசன். குதிரைவால் வந்த பின் காலை ஒரு விதமாய் மடக்கி, மடக்கி நடப்பதாகட்டும், ஏதோ ஒரு யோசனையிலேயே இருக்கும் முகபாவத்தை காட்டுவதிலாகட்டும், திடீரென கோபப்பட்டு கையில் இருக்கும் பந்தை வைத்து அடுத்தவர்களை அடிப்பதிலாகட்டும், இப்படியும் சில கதாபாத்திரங்கள் இருக்கிறது என்பதை நமக்கு சரியாக உணர்த்துகிறார்.

படம் முழுவதுமே கலையரசனை சுற்றித்தான் வருகிறது. திடீரென அஞ்சலி பாட்டீல் கதாபாத்திரம் வருகிறது. அவரும் சில காட்சிகளில் சில வசனங்களைப் பேசிவிட்டு மறைந்து போகிறார். பிளாஷ்பேக்கில் சிறு வயது கலையசரனாக நடித்திருக்கும் சிறுவனும், அவனது கூட்டாளி சிறுமியும் அந்த கிராமத்து நட்பை அழகாய் காட்டியிருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ஆனந்த்சாமி, சேத்தன், அந்த பாட்டி, கேஎஸ்ஜி வெங்கடேஷ் குறிப்பிட வேண்டியவர்கள்.

மன, உணர்வு ரீதியிலான ஒரு படத்திற்கு காட்சிகள் வழியே என்ன கடத்தப்பட வேண்டும் என்பதில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் சரியாய் உழைத்திருக்கிறார். தேவையற்ற காட்சிகள் எதுவுமின்றி இரண்டு மணி நேரத்தில் என்ன சொல்ல வேண்டுமோ அதை சுருக்கமாய் வெட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கிரிதரன்.

பிரதீப்குமார் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் கதையோடு சேர்ந்து வந்திருக்கிறது. மார்ட்டென் விசர் பின்னணி இசை அமைத்திருக்கிறார். அதுவும் கதையுடன் கலந்து ஒலிக்கிறது.

பிளாஷ்பேக் காட்சிகளில் எம்ஜிஆர் பற்றிய சில குறியீடுகள் கதையில் இடம் பெறுகிறது. கூர்ந்து கவனித்தால் இது ஒரு காதல் படம் என்றே புரியும். அதற்குள் சில சமூக பிரச்சினைகளையும் சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். வித்தியாசமான படம், மாறுபட்ட படைப்பு என்று தங்கள் படத்தைப் பற்றிப் பேசட்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே படமெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அதுவே பிளஸ், அதுவே மைனஸ்.

Reference: Cinema Dinamalar