யுத்த சத்தம்,Yutha satham

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் யுத்த சத்தம் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Yutha Satham Movie Review in Tamil

யுத்த சத்தம் திரை விமர்சனம்

Production – கல்லல் குளோபல் என்டர்டெயின்மென்ட்
Director – எழில்
Music – இமான்
Artists – பார்த்திபன், கவுதம் கார்த்திக், சாய் பிரியா
Release Date – 18மார்ச் 2022
Running Time – 2 மணி நேரம் 7 நிமிடம்

நாவல்களைத் திரைப்படமாக்குவதில் மீண்டும் ஒரு முறை தடுமாறியிருக்கிறது தமிழ் சினிமா. இந்தப் படத்தில் நிறையவே தடுமாறியிருக்கிறார் அனுபவம் வாய்ந்த இயக்குனரான எழில்.

த்ரில் நாவல்கள் பலவற்றை எழுதிய பிரபல நாவலாசிரியரான ராஜேஷ்குமார் எழுதிய நாவலை அதே பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். ஒரு பரபரப்பான த்ரில்லர் படம் இது என்று சொன்னார்கள். ஆனால், ஒரு காட்சியில் கூட அந்த பரபரப்பும், த்ரில்லரும் எங்குமே இல்லை என்பது சோகத்திலும் சோகம். தியேட்டரில் ஒரு சிலருடன் படம் பார்த்த நமக்குத்தான் அக்கம், பக்கம் யாருமே இல்லையே என்ற த்ரில் வந்தது.

சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தின் வெளியில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பெண் எதற்காக, ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணையில் இறங்குகிறார். அந்தப் பெண்ணின் காதலனான கவுதம் கார்த்திக் மீது அவருக்கு சந்தேகம் வருகிறது. கடைசியில் அந்தக் கொலைக்குக் காரணமானவர்களை பார்த்திபன் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு சீரியசான த்ரில்லர் படம் என்றால் அதில் முதலில் ரோபோ சங்கர் மாதிரியான நடிகர்களை நடிக்க வைக்கக் கூடாது என்பது இயக்குனருக்குத் தெழியாமல் போனது ஆச்சரியம். காமெடி செய்கிறேன் பேர்வழி என படத்தில் சொல்வது போலவே ‘எலிமென்டரி ஸ்கூல்’ படித்த போது சொன்ன ‘மொக்கை’ காமெடிகளை சொல்லி மிகவும் கடுப்பேற்றுகிறார். ஒரு இளம் பெண் அநியாயமாக கொலை செய்யப்பட்டிருக்க, அதை விசாரிக்கும் அந்த நேரத்தில் கூட நகைச்சுவை என்ற பெயரில் ஒரு சீரியஸ் படத்தை கோமாளித்தனமாக ஆக்கிவிட்டார் ரோபோ சங்கர்.

அந்த ரோபோ சங்கருக்கு ‘கவுன்ட்டர்’ கொடுக்கிறேன் என படத்தின் நாயகன் பார்த்திபனும் பதிலுக்கு அவரது ஸ்டைலில் வசனம் பேசி ஒரு த்ரில்லர் படத்துக்குரிய இலக்கணத்தை என்ன மாதிரியான படம் என்றே விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு போட்டி போட்டு கெடுத்து வைத்திருக்கிறார்கள். பார்த்திபனை படத்தில் இன்ஸ்பெக்டர் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு காட்சியில் கூட அவர் போலீஸ் டிரஸ் போடவேயில்லை, கூடவே முகத்தில் தாடியுடன். தமிழகக் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் தாடி வைத்துக் கொள்ளலாம் என புதிதாக சட்டத்தை மாற்றிவிட்டார்களா என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு ஒரு கதாபாத்திர அமைப்பு. பார்த்திபனும் ஒரு சீனியர் இயக்குனர் தான்.

கவுதம் கார்த்திக் எதற்காக இப்படி முக்கியத்துவம் இல்லாத இரண்டாம் கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு படத்தில் எந்த ஒரு இடத்திலும் நடிக்க ‘ஸ்கோப்’ கிடையாது. படத்தில் காதல் வேண்டும் என்பதற்காக சேர்த்திருப்பார்களோ ?. கவுதம் கார்த்திக் ஜோடியாக சாய் ப்ரியா. தமிழ் பேசத் தெரிந்த ஒரு கதாநாயகி என்பதற்காகவாவது அவருக்கு சில நல்ல காட்சிகளை வைத்திருக்கலாம்.

ஒரே ஒரு தீம் மியூசிக்கை உருவாக்கிவிட்டு, அதை பார்த்திபன் ஜீப் வரும் போதும், போகும் போதும் போட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான். மற்ற காட்சிகளில் ஏதாவது ஒரு பரபரப்பு இருந்தால்தானே அவரும் இசையமைக்க முடியும்.

காட்சிகள், கதாபாத்திரங்கள், திரைக்கதை, வசனம் என அனைத்திலுமே ஒரு ஏனோ தானோ தன்மை. எப்படி இப்படி ஒரு படத்தை உருவாக்கி அவர்களது நேரத்தையும் வீணடித்து, படம் பார்க்க வருபவர்களின் நேரத்தையும் வீணடிப்பார்கள். இயக்குனர் எழில், அவருக்குத் தெரிந்த காமெடி பக்கம் போவதே அவருக்கு நல்லது. போன வாரம் ‘மாறன்’, இந்த வாரம் ‘யுத்த சத்தம்’.

Reference: Cinema Dinamalar