FIR Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் எப்ஐஆர் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

FIR Movie Review in Tamil

எப்ஐஆர் திரை விமர்சனம்

Producer – விவி ஸ்டுடியோஸ்
Director – மனு ஆனந்த்
Music – அஷ்வத்
Artists – விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கௌதம் மேனன்
Release Date – 11 பிப்ரவரி 2022
Movie Time – 2 மணி நேரம் 36 நிமிடம்

நாட்டுப் பற்று, முஸ்லிம் தீவிரவாதம் ஆகியவற்றை மையமாக வைத்து கடந்த பல வருடங்களாகவே பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு படம் இது.

ஒரு த்ரில்லர் கதையை தீவிரவாதத்துடன் சேர்த்து பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இந்திய முஸ்லிம்களும் நாட்டின் மீது பற்றுடனும், பாசத்துடனும் இருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதைக் கரு. அதைச் சுற்றி வளைத்து, கொஞ்சம் குழப்பமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் முஸ்லிம் இளைஞர் விஷ்ணு விஷால். அவரது அம்மா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக இருக்கிறார். ஐஐடியில் கெமிக்கல் எஞ்சினியரிங் படித்து முடித்து, சாதாரண கெமிக்கல் கம்பெனியில் வேலையில் இருக்கும் விஷ்ணு விஷால், நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். எங்கு இன்டர்வியூக்குச் சென்றாலும் ‘நீங்கள் மத ஈடுபாடு உடையவரா’ என கேள்வி எழுப்புகிறார்கள். எனவே, தான் வேலை பார்க்கும் கெமிக்கல் கம்பெனியிலேயே முழுமூச்சாக வேலை செய்ய இறங்குகிறார். இதனிடையே, முஸ்லிம் தீவிரவாதி ஒருவர் இந்தியாவில் பதுங்கி இருப்பதாகத் தகவல் வருகிறது. அதை விசாரிக்கும் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) குழுவிற்கு விஷ்ணு விஷால் மீது சந்தேகம் வர அவரைப் பின் தொடர்கிறது. தன் கம்பெனி வேலையாக ஐதராபாத் சென்று வரும் விஷ்ணு விஷால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் காவலில் இருந்து தப்பிக்கும் விஷ்ணு விஷால், தான் தீவிரவாதி அல்ல என்று நிரூபிக்கப் போராடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இர்பான் அகமது என்ற ஐஐடி படித்து முடித்து முஸ்லிம் இளைஞராக தன்னை அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால். அதற்கேற்ற தோற்றம், தாடி, கண்கள் என கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். என்ஐஏ நடத்தும் கடுமையான விசாரணையில் சிக்கித் தவித்து தான் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை எனக் கதறும் போது கலங்க வைக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்தான் செய்திருப்பாரோ என்று கூட யோசிக்க வைக்கிறார் இயக்குனர். இருப்பினும் அவரது கதாபாத்திரத்தில் வைத்த டிவிஸ்ட்டை கடைசி வரை யூகிக்க முடியவில்லை. அந்த டிவிஸ்ட்டை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் கொடுத்திருந்தால் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் மீது பெரிய மரியாதையே வந்திருக்கும்.

படத்தில் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிக்கா ஜான் என மூன்று கதாநாயகிகள். ஆனால், யாருமே விஷ்ணு விஷாலுக்கு ஜோடியில்லை. என்ஐஏ அதிகாரியாக ரைசா வில்சன். மத்திய அரசாங்கத்தின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான என்ஐஏ–வில் முஸ்லிம் பெண்களும் நாட்டுக்காக பாடுபட்டு உயிர் துறக்கிறார்கள் என்பதை ரைசா கதாபாத்திரம் மூலம் சொல்கிறார் இயக்குனர். மூன்று கதாநாயகிகளில் ரைசாவிற்குத்தான் நடிக்க நல்ல வாய்ப்பு, அதை சிறப்பாகவும் பயன்படுத்தியிருக்கிறார். மஞ்சிமா கதாபாத்திரம் இந்தப் படத்திற்குத் தேவையில்லாத ஒன்று. ரெபா மோனிக்கா கிளைமாக்சில் மட்டும் சில காட்சிகளில் வந்து போகிறார்.

படத்தில் எண்ணற்ற துணைக் கதாபாத்திரங்கள், பெரிய பட்டியலே இருக்கிறது.. ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால் நாயகன் விஷ்ணு விஷாலைச் சுற்றி மட்டுமே பயணிக்க வேண்டிய திரைக்கதை அங்கும், இங்கும் அலைந்து திரிகிறது. மற்ற கதாபாத்திரங்களில் என்ஐஏ தலைவராக நடிக்கும் கவுதம் மேனன் தனித்துத் தெரிகிறார். முழு நேர நடிகராக மாறிவிடலாம். என்ன ஒன்று ரசனையான காதல் படங்களை எடுக்கும் இயக்குனர் காணாமல் போய்விடுவார்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், கலை இயக்குனர் இந்துலால் கவீத், ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா ஆகியோர் மேக்கிங்கில் இயக்குனருக்கு நிறையவே கை கொடுத்திருக்கிறார்கள். அஷ்வத் பின்னணி இசையில் தன் பெயரைப் பதிய வைக்க முயற்சித்திருக்கிறார்.

சில தேவையற்ற காட்சிகள், கதாபாத்திரங்களை நீக்கி, திரைக்கதையையும் சுற்ற விடாமல் செய்திருந்தால் இந்த முதல் தகவல் அறிக்கை (‘எப்ஐஆர்) முத்தான தகவல் அறிக்கையாக அமைந்திருக்கும்.

Reference: Cinema Dinamalar