வீரபாண்டியபுரம்,Veerapandiyapuram

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் வீரபாண்டியபுரம் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Veerapandiyapuram Movie Review in Tamil

வீரபாண்டியபுரம் திரை விமர்சனம்

Producer – லென்டி ஸ்டுடியோ
Director – சுசீந்திரன்
Music – ஜெய்
Artists – ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன்
Release Date – 17 பிப்ரவரி 2022
Movie Time – 1 மணி நேரம் 59 நிமிடம்

கத்தி, வெட்டு, குத்து, கொலை, பழி வாங்கல் என வந்துள்ள மற்றுமொரு கிராமத்துத் திரைப்படம். ஒரு சில படங்களில் முத்திரை பதித்த இயக்குனர் சுசீந்திரன் அவ்வப்போது இப்படியான படங்களை எதற்குக் கொடுக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

இரண்டு கிராமங்களுக்கிடையே தீராத பகை. ஒருவர் மாற்றி மற்றொருவர் வெட்டிக் கொல்கிறார்கள். ஒரு கிராமத்தின் பெரிய மனிதரான ஜெயப்பிரகாஷின் மகளை மற்றொரு கிராமத்தின் பெரிய மனிதரான சரத் லோகிதாஸ் கொன்றுவிடுகிறார். அதற்குப் பழி வாங்க சரத்தையும், அவரது மூன்று தம்பிகளையும் கொல்லத் துடிக்கிறார் ஜெயப்பிரகாஷ். இதனிடையே, சரத்தின் மகள் மீனாட்சி கோவிந்தராஜன் அனாதையான ஜெய்யைக் காதல் திருமணம் செய்யும் நேரத்தில், மீனாட்சியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் நடக்க வேண்டாம் என ஜெய் தடுத்து, மீனாட்சியின் ஊருக்குச் செல்கிறார். ஜெய்யின் நல்ல மனதைப் புரிந்து கொள்ளும் சரத் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்து நாளும் குறிக்கிறார். ஆனால், திருமணத்தின் போது ஜெய்யைக் கொல்வதுதான் அவரது திட்டம். மீனாட்சி, ஜெய் திருமணம் நடைபெற்றதா, அல்லது ஜெய் கொல்லப்பட்டாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இன்னும் இது மாதிரியான எத்தனை கதைகளைப் பார்க்க தமிழ் சினிமா காத்துக் கொண்டிருக்கிறதோ? உலகப் போரில் இறந்தவர்களை விட இந்தப் படத்தில் மாறி, மாறி வெட்டுபட்டு, குத்துபட்டு இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. ஜெய்பிரகாஷ் தன் மகள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க மற்றவர்களைக் கொல்வது ஒரு பக்கம் என்றால், சம்பந்தமே இல்லாமல் அந்த ஊரில் உள்ளவர்கள் எதற்காக சாக வேண்டும். அவர்களுக்கென மனைவி, குழந்தைகள், குடும்பம் இல்லையா? தமிழ் சினிமா இயக்குனர்களே, இப்படியான படங்களைப் பார்த்துப் பார்த்து இங்குள்ள ரசிகர்கள் சலித்துப் போய்விட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமாக சிந்தியுங்கள் ப்ளீஸ்.

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஜெய் நடித்து வெளிவந்துள்ள படம். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். இசையமைப்பாளராக ஒரு பாடலை மட்டும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். நடிப்பு, வழக்கம் போல, கொஞ்சம் அப்பாவித்தனமான முகத்துடன் முத்திரை பதிக்க முயன்றிருக்கிறார்.

ஜெய்யின் காதலியாக மீனாட்சி கோவிந்தராஜன். பெரிய வேலையில்லை, கல்யாணத்தின் போதும், காதலன் ஜெய்யிடம், தன் அப்பாவைக் கொன்றது ஏன் என்று கேள்வி கேட்கும் போதும் கொஞ்சம் நடித்திருக்கிறார்.

வில்லனாக சரத் லோகிதாஸ், கொஞ்சம் உருட்டல், மிரட்டல் என வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். அவரது மூன்று தம்பிகளுமே அண்ணன் சொன்ன உடனே, கையில் கத்தியுடன் யாரையாவது கொல்ல வேண்டும் என ரத்த வெறி பிடித்து அலைகிறார்கள். ஜெய்யின் திடீர் நண்பனாக பாலசரவணன், சிரிக்க வைக்க முயன்று தோற்றுப் போகிறார். ஜெய்பிரகாஷ் கத்தியைக் தூக்கிக் கொண்டு அடுத்தவர்களை வெட்டப் போகிறார் என்று பார்ப்பதெல்லாம் பொருந்தவில்லை.

பிளாஷ்பேக்கில் மலை கிராமத்து மக்களுக்காக படிப்பு சொல்லிக் கொடுக்க ஜெயப்பிரகாஷ் மகள் வந்து போகிறார் என்பதை கல்விக்கு முக்கியத்துவமாக அழுத்தமாகக் காட்டியிருக்கலாம். தன் பட எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டிவிட மட்டும் உழைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

Reference: Cinema Dinamalar