ஆராட்டு (மலையாளம்),Aarattu

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் ஆராட்டு (மலையாளம்) படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Aarattu Movie Review in Tamil

ஆராட்டு (மலையாளம்) திரை விமர்சனம்

Producer: ஆர்டிஐ இலுமினேஷன்ஸ் & எம்பிஎம் குரூப்
Director: பி.உன்னிகிருஷ்ணன்
Music: ராகுல்ராஜ்
Artists: மோகன்லால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி நாரயணன்குட்டி, சுவாசிகா, நேகா சக்சேனா, விஜயராகவன், சாய்குமார், முகேஷ், இந்திரன்ஸ் மற்றும் ஏ ஆர் ரகுமான்
Release Date: 18.02.22
Movie Time: 2 மணி 47 நிமிடங்கள்

மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான உன்னிகிருஷ்ணனும் புலிமுருகன் பட கதாசிரியர் உதயகிருஷ்ணாவும் இணைந்து உருவாக்கிய இந்த ஆராட்டு ரசிகர்கள் கொண்டாடும்படி இருக்கிறதா ? பார்க்கலாம்..

பாலக்காட்டில் உள்ள கிராமம் ஒன்றில் பைனான்சியர் விஜயராகவன் தனக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்றில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்ட நினைக்கிறார். ஆனால் அது விவசாய பூமி என்பதால் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் புதிய சட்டப்படி அந்த நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார் ஆர்டிஓ ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதைத் தடுப்பதற்காக நெய்யாற்றின்கரை கோபன் என்கிற மோகன்லாலுக்கு ஏற்கனவே அந்த இடத்தை குத்தகைக்கு விட்டதாக கூறி மோகன்லாலை வர வைத்து நில ஆர்ஜிதம் செய்வதை தடுக்கிறார் விஜயராகவன்.

அந்தப் பகுதியையே தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் நான்கு இளைஞர்களையும் அவர்களை வழிநடத்தும் ஆன்மீக குருவையும் சாதுரியமாக தன் பக்கம் திருப்பும் மோகன்லால், அந்த ஊருக்கு ஏ.ஆர்.ரகுமானை அழைத்து வந்து மிகப்பெரிய கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் அந்த ஊரில் உள்ள பலருக்கு வீடுகளும் ஏழைப் பெண்களுக்கு திருமணமும் செய்து வைக்கலாமென ஆசைகாட்டி ஊர்க்காரர்களையும் தன் பக்கம் இழுக்கிறார்.

இதற்கான வேலைகளை ஓரளவு முடித்த நிலையில், தனது மகனுடன் மோகன்லால் பிரச்சனை செய்ததால் தான் எழுதிக் கொடுத்த பத்திரத்தை திருப்பி கேட்கிறார் விஜயராகவன். ஆனால் அது அப்பாவியான நெடுமுடி வேணுவிடம் இருந்து விஜயராகவனால் அபகரிக்கப்பட்ட நிலம் என்கிற உண்மையை தான் கண்டுபிடித்து விட்டதாக கூறும் மோகன்லால், அவரை அழைத்து வந்து அந்த ஊரில் தங்க வைக்கிறார். இதனால் கோபமான விஜயராகவன் அந்த ஊரில் ஏ.ஆர் ரகுமான் நிகழ்ச்சி நடக்கும் அன்று மோகன்லாலை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார். அவரது திட்டம் பலித்ததா, நெய்யாற்றின்கரை கோபன் என்கிற மோகன்லால் உண்மையில் யார், அவரை ஏன் எந்த ஒரு போலீசாரும் நெருங்க முடியவில்லை, அவர் எதற்காக இந்த ஊருக்கு வந்தார் என்கிற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை

இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே சொன்னது போன்று நெய்யாற்றின்கரை கோபனாக 90களில் பார்த்த மோகன்லாலை மீண்டும் பார்க்க முடிந்ததில் சந்தோசம் தான். அதற்காக ஸ்படிகம், நரசிம்மம் என அந்த காலகட்டத்தில் வெளியான மோகன்லாலின் படங்களில் இடம்பெற்ற வசனங்களையும் பின்னணி இசையையும் இதில் சேர்த்திருப்பது கொஞ்சம் காமெடியாக தான் இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் மோகன்லாலின் வேகம் இப்போதும் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக எதிரிகளிடம் மோகன்லால் கால் பிடித்து மன்னிப்பு கேட்கும் டெக்னிக் ஆரம்பத்தில் ரசிக்க வைக்கிறது. போகப்போக அதுவே அலுப்பையும் தருகிறது. மோகன்லால் யார் என்கிற உண்மை தெரியவரும்போது பிரமிப்பு ஏற்படுவதற்கு பதிலாக செயற்கைத் தனமே மேலோங்கி இருப்பதும் அவரை பற்றிய உண்மையை ஆச்சரியப்படும் விதமாக வெளிப்படுத்தாதும் சப்பென்று ஆகிவிடுகிறது.

படத்தில் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்றாலும் விறைப்பும் முறைப்பும் கலந்த அதிகாரியாக அவ்வப்போது வந்து கூட்டத்தில் ஒருவர் போல கரைந்து போய் விடுகிறார். அதேசமயம் ஊர்க்கார பெண்களாக நடித்திருக்கும் ரக்ஷனா நாராயணன் குட்டி மற்றும் சுவாசிகா இருவரும் கதாநாயகிகள் ரேஞ்சுக்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சித்திக்கிற்கு என்று மலையாள திரையுலகில் ரெடிமேடாக தைத்து வைக்கப்பட்ட போலீஸ் யூனிபார்ம் இந்தப்படத்திலும் உதவி இருக்கிறது.. அவ்வளவுதான்.. விஜயராகவன் வில்லத்தனம் வழக்கம்போல.. கிராமத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் நான்கு இளைஞர்களில் துருவங்கள் பதினாறு புகழ் அஸ்வின் குமார் மட்டும் கவனிக்க வைக்கிறார். கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு புலி போல சீறிக்கொண்டு வந்து பூனையாக திரும்பி செல்கிறார்.

வில்லன்கள் பக்கம் நின்று கொண்டு அவர்களையே கலாய்க்கும் வேலையை தமிழில் மறைந்த நடிகர் சிட்டிபாபு செய்து கொண்டிருந்தார். மலையாளத்தில் இதே போன்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து அசத்தி வரும் இயக்குனர் ஜானி ஆண்டனி இந்தப்படத்திலும் மோகன்லாலுடன் இணைந்து காமெடியில் களை கட்டுகிறார். படுத்த படுக்கையாக கிடக்கும் நடிகர் இந்திரன்ஸின் வசனமே பேசாத நடிப்பு கொஞ்ச நேரமே என்றாலும் நல்ல காமெடி. ஆன்மீக குருவாக வரும் ரமேஷ் கோட்டயத்தின் கதாபாத்திரம் எதிர்பாராத கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கொடுத்தாலும் நம்பமுடியாமல் நகைக்க வைக்கிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த சீதா இதில் அம்மாவாக நடித்து ஆச்சரியம் தருகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்தில் தனது நிஜ கதாபாத்திரத்திலேயே வந்து ஒரு பாடலை பாடி செல்லும் காட்சியில் நடித்து பிரமிப்பை ஏற்படுத்தி விடுகிறார். ஆனால் கிளைமாக்ஸில் இந்த காட்சியை பயன்படுத்திய விதத்தில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கான விறுவிறுப்பு இல்லாமல் போய்விடுவது ஒரு குறை.

மலைப்பகுதிகளே இல்லாத கேரளாவை விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது தமிழ்நாட்டு கிராமங்களின் வயல்வெளிகளில் சுற்றிவந்த உணர்வு ஏற்படுகிறது. மோகன்லால் காரில் வந்தால் காரை விட்டு இறங்கினால், வசனம் பேசிவிட்டு ஸ்லோமோஷனில் திரும்பினால் என ஒரே பில்டப் மியூசிக்கை படத்தில் திரும்பத் திரும்ப பயன்படுத்தி ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கே கடுப்பு ஏற்படும்படி செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் ராகுல் ராஜ். ஐயோ இந்த இடத்தில் பாடல் வந்து விடக்கூடாதே என நாம் நினைக்கும்போதே பாடல் வந்துவிடுகிறது.

புலி முருகன் படத்திற்கு கதை எழுதியவர் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளாரா என்கிற அதிர்ச்சியை தந்திருக்கிறார் கதாசிரியர் உதயகிருஷ்ணா. இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணனும் மோகன்லாலின் பில்டப் காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தியவர் திரைக்கதை அமைப்பில் கவனம் செலுத்த மறந்து விட்டார் போலும். மோகன்லால் எதற்காக இந்த கிராமத்திற்கு வந்தார் என சொல்லப்படும் காரணமும் அதை அவர் செயல்படுத்தும் விதமும் வடிவேலு ஒரு படத்தில் மூட்டைப்பூச்சியை உரலில் போட்டு இடித்து கொல்ல சொல்வாரே, அந்த காமெடி போல அமைந்துவிட்டது.

திரிஷ்யம் 2 படத்தின் ரீமேக்கை வாங்க போட்டி போட்டவர்கள் இந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை சும்மாவே கொடுத்தாலும் வாங்குவார்களா என்பது சந்தேகம்தான்.

Reference: Cinema Dinamalar