லவ் டுடே,Love Today

தயாரிப்பு – எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – பிரதீப் ரங்கநாதன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா, ரவீணா
வெளியான தேதி – 4 நவம்பர் 2022
நேரம் – 2 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் – 3.25/5

ஒரு படத்தின் டிரைலரைப் பார்த்தே இந்தப் படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா என ரசிகர்கள் ஓரளவிற்கு முடிவு செய்து கொள்வார்கள். இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்ததும் 2 கே கிட்ஸ்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தது படத்தின் முதல் நாள் வரவேற்பிலேயே தெரிகிறது. அதே சமயம் இந்தப் படத்தின் டிரைலர் கொஞ்சம் 2 கே–க்கு முன்பாகப் பிறந்தவர்களுக்கு நிறையவே அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அந்த அதிர்ச்சிக்கு இடமளிக்காமல் இரண்டு சிறப்பான மெசேஜ்களை படத்தில் வைத்து அவர்களையும் திருப்திப்படுத்திவிட்டார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

தனது இயக்கத்தில் வெளிவந்த ‘கோமாளி’ படம் மூலமாக ஒரு மாறுபட்ட படத்தைக் கொடுத்து யார் இவர் என வியக்க வைத்தவர் பிரதீப். அவரது இந்த இரண்டாவது படத்தில் துணிச்சலாக, நம்பிக்கையுடன் நாயகனாகவும் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் உள்ள சிலருக்கு பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்று தாரளாமாகச் சொல்லலாம்.

 

ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் பிரதீப் – இவானா இருவரும் காதலர்கள். இவர்கள் காதல் விவகாரம் இவானா அப்பா சத்யராஜுக்குத் தெரிய வருகிறது. பிரதீப்பை வீட்டிற்கு வரவழைத்துப் பேசி பிரதீப், இவானா மொபைல் போன்களை இருவரிடமும் மாற்றிக் கொடுத்து ஒரு நாள் வைத்திருங்கள் என்கிறார். மாற்றிக் கொண்ட மொபைல் போன்கள் மூலமாக ஒருவர் ரகசியம் மற்றவருக்குத் தெரிய வர பிரதீப், இவானா சண்டை போட ஆரம்பிக்கிறார்கள். அந்த சண்டை பிரிவு வரை செல்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

‘லவ் டுடே’ என படத்திற்குப் பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். 1997ம் ஆண்டில் விஜய், சுவலட்சுமி நடித்து பாலசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘லவ் டுடே’ அப்போது பெரிய வெற்றிப் படம். அன்றைய அந்தக் காதல் படத்திற்கும், அதே பெயரை கடன் வாங்கி இப்போது எடுத்திருக்கும் காதல் படத்திற்கும் இடையில் உள்ள ‘காதல்’ எவ்வளவு மாறிவிட்டது என்பதை நினைக்கும் போது அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

நாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பைப் பற்றியும் பேச வைத்துவிட்டார் பிரதீப். காதல், எமோஷன், காமெடி என எல்லாம் கலந்த ‘உத்தமன் பிரதீப்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் உத்தமமாய் இருக்கிறார். எந்தக் காட்சியிலும் கதாபாத்திரத்திற்காக நடித்திருக்கிறார் என்று சொல்லமுடியாதபடி நடித்திருக்கிறார். தன்னைப் பற்றிய தவறுகளை மறைத்துவிட்டு, காதலி செய்த தவறுகளை மட்டும் பெரிதுபடுத்திப் பேசும் ஒரு கதாபாத்திரம். தன்னைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்ததும் அதை சமாளிக்க அவர் செய்யும் விஷயங்கள் பலரது நிஜமான கேரக்டர். கிளைமாக்ஸ் காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார் பிரதீப்.

இவானா, இதற்கு முன்பு இவர் எந்தெந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று படம் பார்க்க வருபவர்கள் யோசித்திருப்பார்கள். ஆனால், இந்தப் படம் இவானாவுக்கு இனி இனிய முகவரியாக அமையப் போகிறது. இளம் வயதில் கொஞ்சம் ‘ப்ரீக் அவுட்’ ஆக இருக்க நினைக்கும் ஒரு பெண் என்னவெல்லாம் செய்வார், எப்படியெல்லாம் இருப்பார் என்பதை கண்முன் நிறுத்துகிறார். ஒரு பக்கம் அப்பா சத்யராஜின் கண்டிப்பு, மறுபக்கம் காதலன் பிரதீப்பின் காதல் தொல்லை என ஒரு எமோஷனல் கதாபாத்திரத்தை எளிதாக ஹேண்டில் செய்திருக்கிறார்.

2 கே கிட்ஸ்களின் காதல் எப்படி இருக்கிறது என ஒரு பக்கம் காட்டினாலும், மறுபக்கம் ‘அரேஞ்டு மேரேஜ்’ கூட எப்படி சந்தேகங்களை ஏற்படுத்துகிறது எனவும் காட்டியிருக்கிறார் பிரதீப். அவருடைய அக்கா ரவீணாவுக்கும் யோகிபாபுவுக்கும் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அந்தக் கதாபாத்திரங்களை வைத்தும் ஒரு ‘பாடத்தை’ எடுத்திருக்கிறார். யோகிபாபுவைப் பார்த்து சிரித்தவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து நிச்சயம் யோசிப்பார்கள். அக்கா ரவீணாவின் நடிப்பும் அவ்வளவு இயல்பு.

எந்த மாதிரியான அம்மா கதாபாத்திரம் கொடுத்தாலும் ஸ்கோர் செய்பவர் ராதிகா சரத்குமார். இந்தப் படத்தில் பிரதீப்பின் அம்மாவாக, 2 கே கிட்ஸ்களின் அம்மாவாக மனம் கவர்கிறார். அதிலும் ஒரு காட்சியில் பிரதீப்புக்கு அவர் அட்வைஸ் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இவானாவின் அப்பாவாக சத்யராஜ். தன் செயல்களாலேயே வெறுப்பைக் காட்டுகிறார் என்று நினைத்தால் அக்கதாபாத்திரத்திற்கும் ஒரு டச்சிங்கான முடிவை வைத்திருக்கிறார் இயக்குனர். பிரதீப்பின் நண்பர்கள், இவானாவின் நண்பனாக ஆஜீத் ஆகியோரும் அவர்களது நடிப்பைக் குறிப்பிட வைக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜாவை இயக்குனர் தேர்வு செய்தது பொருத்தமான ஒன்று. பல காட்சிகளை மட்டுமல்ல படத்தையே தன் பின்னணி இசையாலும் தூக்கி நிறுத்துகிறார் யுவன். பாடல்களுக்கான இடங்கள் பல இருந்தாலும் ஓரிரு பாடல்கள் மட்டுமே படத்தில் இடம் பெற்றிருக்கிறது. காதல் பிளஸ் எமோஷனல் படத்திற்கான காட்சிப் பதிவுகளைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்.

இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் தடுமாற்றம் இருக்கிறது. அடிக்கடி நாயகனும், நாயகியும் போனிலேயே பேசிக் கொள்வது அதிகமாக உள்ளது. இளம் ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சில நெருக்கமான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது.

காதலில் நம்பிக்கை எவ்வளவு அவசியம் என்பதுதான் இந்தப் படம் சொல்ல வரும் கருத்து. காதலர்கள் எவ்வளவு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் சில விஷயங்களை மறைப்பதும் மகிழ்வைத் தரும் என்கிறது. அவை என்னென்ன என்பதுதான் படத்தின் ஹைலைட்.

லவ் டுடே – நம்பிக்கைதான் வாழ்க்கை

Source: Cinema Dinamalar