கூமன் (மலையாளம்),Kooman (Malayalam)

தயாரிப்பு : மேஜிக் பிரேம்ஸ் / லிஸ்டில் ஸ்டீபன்
இயக்கம் : ஜீத்து ஜோசப்
நடிகர்கள் : ஆசிப் அலி, ரெஞ்சி பணிக்கர், பாபுராஜ், ஹன்னா ரெஜி கோஷி, ஜாபர் இடுக்கி, மேகநாதன் மற்றும் பலர்
நேரம் : 2 மணி 33 நிமிடங்கள்
வெளியான நாள் : 4.11.2022
ரேட்டிங் : 3/5

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படங்கள் என்றாலே இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு அல்வா சாப்பிடுவது போல. தற்போது இளம் மலையாள நடிகர் ஆசிப் அலியை வைத்து அதே ஜானரில் சற்று வித்யாசமான முயற்சி ஒன்றை இந்த படத்தில் முயன்று பார்த்துள்ளார் ஜீத்து ஜோசப். அது ஒர்க் அவுட் ஆகி உள்ளதா? பார்க்கலாம்.

கிராமத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் கான்ஸ்டபிள் ஆக வேலை பார்ப்பவர் ஆசிப் அலி. கான்ஸ்டபிள் என்பதாலேயே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மற்றும் லோக்கல் அரசியல்வாதி உள்ளிட்ட சிலர் அவரை ஏளனமாகவே சீல் செய்கிறார்கள். இதனால் கோபமான ஆசிப் அலி அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட நினைக்கிறார். அதற்காக வயதான திருடன் ஜாபர் இடுக்கியிடம் திருடுவது குறித்து நுணுக்கமாக சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார். அதன்பிறகு அந்த பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நுழைந்து லாவகமாக திருடுகிறார். அதை கண்டுபிடிக்க முடியாமல் இன்ஸ்பெக்டர் பாபுராஜ் திணறுவதை கண்டு ரசிக்கிறார். இந்த வழக்குகளில் விசாரணை என்கிற பெயரில் தன்னை அவமானப்படுத்திய இரண்டு பேரை லாக்கப்பில் வைத்து அடி வாங்க செய்கிறார்.

ஒருகட்டத்தில் போலீஸ் உயரதிகாரி, இன்ஸ்பெக்டரின் திறமையின்மையை குத்திக்காட்டி, அவருக்கு மூன்று நாள் கெடு வைத்து குற்றவாளியை கண்டு பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். இதனைத்தொடர்ந்து தற்போதைக்கு பிரச்னையில் இருந்து தப்பிக்க உதவுகிறேன் என இன்ஸ்பெக்டரிடம் கூறி தனக்கு திருட்டு நுணுக்கங்களை சொல்லித்தந்த திருடனை இந்த வழக்கில் சிக்கவைத்து உள்ளே தள்ளுகிறார். ஆனால் அதனைத் தொடர்ந்து அந்த திருடனையும் சாமர்த்தியமாக தப்ப வைத்து அந்த பழியை இன்ஸ்பெக்டர் மீது விழும்படி செய்து அவருக்கு சஸ்பென்ஷன் கிடைக்கும்படி அழகாக கேம் ஆடுகிறார் ஆசிப் அலி. இதனால் சஸ்பெண்டான இன்ஸ்பெக்டருக்கும் அவரது கூட்டாளிகள் இருவருக்கும் ஆசிப் அலி மீது சந்தேகம் வருகிறது.

நாயகன் ஆசிப் அலி, தனக்கு யாராவது சவால் விடும்படி பேசினாலோ அல்லது தன்னால் முடியாது என்று மட்டும் தட்டினாலோ அதை செய்து முடிக்கும் ஒருவிதமான ஸ்பிலிட் பர்சனாலிட்டியால் பாதிக்கப்பட்டவர். இன்ஸ்பெகடர் உள்ளிட்டோரை பழி தீர்த்தாலும் அவரது இந்த குணாதிசயத்தில் இருந்து விலக முடியாமல், ஒருநாள் தன் ஊரை சேர்ந்த ஒருவர் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக செல்லும்போது ஆசிப் அலியை அடையாளம் கண்டு கொள்கிறார் அந்த வீட்டுக்காரர். அவரிடமிருந்து தப்பி ஓடும் ஆசிப் அலி தமிழகத்திற்கு சென்று ஒருநாள் முழுதும் தலைமறைவாக இருக்கிறார். மறுநாள் ஊருக்கு திரும்பி வரும்பொழுது தான் திருடச்சென்ற அந்த வீட்டுக்காரர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

அதுமட்டுமல்ல அந்த வீட்டுக்காரர் இவரை விரட்டும் வீடியோ ஒன்று இவரது மொபைல் போனுக்கு மர்ம நபர் ஒருவரால் அனுப்பி வைக்கப்படுகிறது. எப்படியும் தனது திருட்டுகளுக்காக தான் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தாலும் இவரது தற்கொலைக்கு காரணமானவர் யார் என ஆராய தொடங்குகிறார் ஆசிப் அலி. அதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் அடுக்கடுக்காக கிடைக்கின்றன. அது தற்கொலை அல்ல திட்டமிடப்பட்ட கொலை என்கிற உண்மை ஆசிப் அலிக்கு தெரியவருகிறது. அவர்கள் யார் என்பதை ஆசிப் அலி கண்டுபிடித்தாரா? ஆசிப் அலி செய்த திருட்டுக்களுக்காக அவருக்கு தண்டனை கிடைத்ததா? இல்லை அதிலிருந்தும் சாமர்த்தியமாக தப்பிக்கிறாரா என்பது மீதிக்கதை.

ஜீத்து ஜோசப் படங்கள் என்றாலே அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாதபடி திரைக்கதை பயணிக்கும். இதிலும் அந்த மேஜிக் தொடர்கிறது. வழக்கமாக ஜீத்து ஜோசப் படங்களில் கதாநாயகன் மீது ஒரு பிரச்னையை சுமத்தி அவன் மாட்டிக்கொள்வானா, இல்லை அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி அவனுக்கு ஆதரவாகவே நம்மை பதைபதைக்க வைக்கும் விதமாக தொடர வைப்பது அவரது பாணி. இந்தப் படத்தின் ஹீரோ ஆசிப் அலி மீதும் அப்படி ஒரு உணர்வை நமக்கு துவக்கத்திலேயே ஏற்படுத்தி விடுகிறார் ஜீது ஜோசப்.

படத்தின் நாயகன் ஆசிப் அலியும் அதை நன்கு உணர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் அந்த உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். ஆசிப் அலியின் சிறுவயது தோழியாக கதாநாயகியாக நடித்துள்ள ஹன்னா ரெஜி கோஷி கதாபாத்திரம் குறித்த கிளைமாக்ஸ் திருப்பம் எதிர்பாராதது.

படத்தில் ஆசிப் அலி தவிர போலீஸ் அதிகாரிகளாக வரும் பாபுராஜ், மேகநாதன் மற்றும் நாயகனுக்கு ஆதரவாக செயல்படும் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியான ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்ட பலரும் காவல்துறை நடைமுறைகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அதிலும் கைதேர்ந்த திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாபர் இடுக்கியின் நடிப்பும் உடல்மொழியும் ஆச்சரியப்படுத்துகிறது.

இடைவேளை வரை இந்த கதை எந்த திசையில் பயணிக்கும், எந்த விதமாக முடியும் என கொஞ்சம் கூட யூகிக்க முடியாதபடி தனது பாணியில் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் ஜீத்து ஜோசப். ஆனால் இடைவேளைக்கு பிறகு கதை வேறு திசையில் பாதை மாறுவதும் இதற்கெல்லாம் சற்றும் பொருந்தாத விதமாக ஒரு காரணத்தை கூறி கிளைமாக்ஸ் அமைத்திருந்ததும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இடைவேளைக்கு பின்னரும் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருந்தாலும் அதை நியாயப்படுத்தும் விதமாக கிளைமாக்சை அமைக்க தவறிவிட்டார் ஜீத்து ஜோசப்.

அதேசமயம் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இரண்டு மணி நேரம் பொழுதுபோக்கு உணர்வை கொடுக்கவும் அவர் தவறவில்லை.

கூமன் : நினைத்ததை முடிப்பவன்

Source: Cinema Dinamalar