அவதார் : தி வே ஆப் வாட்டர்,Avatar: The Way of Water

தயாரிப்பு – லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – ஜேம்ஸ் கேமரூன்
இசை – சைமன் பிராக்ளன்
நடிப்பு – சாம் வொர்த்திங்டன், ஜோ சால்டனா
வெளியான தேதி – 16 டிசம்பர் 2022
நேரம் – 3 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் – 3.5/5

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளிவந்து உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த ஒரு படம் ‘அவதார்’. இப்படி ஒரு சயின்ஸ் – பிக்ஷன் படமா என படத்தைப் பார்த்து அப்போது வியக்காதவர்களே இல்லை. அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் – த வே ஆப் வாட்டர்’ படம் உலக அளவில் இன்று வெளியாகியுள்ளது. படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

முதல் பாகத்தில் பண்டோரா உலகத்தில் உள்ள நாவி இன மக்களுக்கும், அங்கு அந்த மக்களுடன் பழகி ஆராய்ச்சி செய்வதற்காக நாவி இன மனிதனாக உருமாறி அனுப்பப்பட்ட கதாநாயகன் கடைசியில் நாவி இன மக்களுக்காகவே போராடுவதாக படம் முடிந்தது. நாவி இன மக்களை அழிக்க ராணுவத்தின் கர்னல் தனிப்படையுடன் செல்ல அவரை கதாநாயகன் கொல்வதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த இரண்டாம் பாகத்தில் அந்த கர்னல், நாவி இன மனிதனாக உருமாறி மீண்டும் பண்டோரா உலகத்திற்குச் செல்கிறார். கதாநாயகனைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் வெறியுடன் இருக்கிறார். மனைவி, இரண்டு மகன், இரண்டு மகள் என குடும்ப வாழ்க்கையில் இருக்கும் கதாநாயகன் ஜேக் சல்லி தன்னைக் கொல்ல கர்னல் வருவது தெரிந்து, குடும்பத்துடன் ‘கடல்வாசிகள்’ என அழைக்கப்படும் மற்றொரு இனத்துடன் அடைக்கலமாகிறார். அங்கும் கர்னல் செல்ல அவரை எதிர்த்து ஜேக் சல்லி எப்படிப் போராடுகிறார் என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் கதைச் சுருக்கம். இரண்டாம் பாகத்தில் கதாநாயகன் மட்டுமல்லாது அவரது வாரிசுகளும் வில்லனை எதிர்த்து அப்பாவுக்குத் துணையாகப் போராடுகிறார்கள்.

முதல் பாகத்தில் நமக்கு எல்லாமே புதிதாகத் தெரிந்தது. பண்டோரா, பத்து அடி உயர நாவி இனம், ராணுவம், வித்தியாசமான மரம், செடி, கொடி, பூக்கள், விலங்குகள், பறவை இனம், அவர்களின் ஆன்மீக நம்பிக்கை, மூதாதையர் மீதான மரியாதை என அந்த உலகத்திற்கே நம்மை அழைத்துச் சென்றார் ஜேம்ஸ் கேமரூன்.

முதல் பாகம் காட்டில் நடந்த கதை என்றால் இந்த இரண்டாம் பாகம் கடலில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘டைட்டானிக்’ படம் எடுத்து மிரட்டிய ஜேம்ஸ் கேமரூனுக்கு மீண்டும் கடல் மீது ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டுவது புதிததல்ல. அதே சமயம், கிளைமாக்சில் கர்னல் தலைமையில் வந்த அந்த பிரம்மாண்டக் கப்பலில் நடக்கும் சண்டைகள் ‘டைட்டானிக்’கையும் கொஞ்சம் ஞாபகப்படுத்துகின்றன.

3 மணி நேரம் 16 நிமிடக் கதையை இன்னும் நீளம் குறைவாகவே கொடுத்திருக்கலாம். ‘கடல்வாசிகள்’ இனத்துடன் வந்து ஜேக் சல்லி குடும்பம் அடைக்கலமாக காட்டில் இருப்பது போல கடலில் இருக்க முடியாது என ஜேக் குடும்பத்திற்கு கடல்வாசிகளின் தலைவர் அதற்காக பயிற்சி கொடுக்கிறார். அந்தப் பயிற்சிக் காட்சிகள் எல்லாம் மிகவும் நீளமானவை. அதன் பிறகு பிரம்மாண்டமான திமிங்கிலம் போன்ற ஒரு உயிரினத்துடன் ஜேக்கின் இரண்டாம் மகன் நெருக்கமாகப் பழகும் காட்சிகள் சற்றே போரடிக்கின்றன.

பெரிய திருப்பங்கள் கதையில் இல்லாதது ஒரு குறை. தனது மனைவி, வாரிசுகளைக் காப்பாற்ற கதாநாயகன் எப்படிப் போராடுகிறார் என்ற ஒரு வரிக் கதையைச் சுற்றியே காட்சிகள் நகர்கின்றன. கர்னல் தாக்குவதும், பதிலுக்கு ஜேக் எதிர்த்தாக்குதல் கொடுப்பதுமாக மட்டுமே இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகள் நகர்கின்றன. சில இடங்களில் அடுத்து என்ன நடக்கும் என்றும் யூகிக்க முடிகிறது.

ஆனாலும், கடல், கடல் சார்ந்த இடம், கடல் வாழ் உயிரினங்கள், பிரம்மாண்டமான ‘டுல்குன்’ என திரையில் பெரும் மாயாஜாலத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். 3 டியில் பார்க்கும் போது அவை கண்களுக்கு விருந்தாக உள்ளன.

ஜேக் சல்லி ஆக சாம் வொர்த்திங்டன், அவரது மனைவி நேய்த்திரி ஆக ஜோ சால்டனா நடித்திருக்கிறார்கள். பொறுப்பான பெற்றோர்களாக பாச மழை பொழிகிறார்கள். அவர்களது வளர்ப்பு மகள் கிரி ஆக சிகோர்னி வீவர், மூத்த மகனாக ஜேமி பிளாட்டர்ஸ், இரண்டாவது மகனாக பிரிட்டைன் டால்டன், கடைசி மகள் டுக் ஆக டிரினிட்டி ஜே லி பிளிஸ் நடித்திருக்கிறார்கள். கர்னல் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்டீபன் லாங் அதிரடி காட்டியிருக்கிறார். அடுத்த பாகத்திலும் இந்தக் கதாபாத்திரத்திற்கு வேலை இருக்கிறது.

கடல்வாசிகள் இனத் தலைவன் டோனோவாரி ஆக கிளிப் கர்ட்டிஸ், அவரது மனைவி ரோனல் ஆக கேட் வின்ஸ்லட் இருவரும் ஜேக் குடும்பத்திற்கு ஆதரவாக அடைக்கலம் கொடுத்து கூடவே உறுதுணை ஆக நிற்கிறார்கள்.

முதல் பாகம் அளவிற்கு படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுமா என்பது சந்தேகமாக இருந்தாலும் வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளது. விஎப்எக்ஸ் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டலாக அமைந்துள்ளதால் ஒரு முறையாவது படத்தைப் பார்க்க வேண்டும் என்று ‘அவதார்’ முதல் பாகத்தின் ரசிகர்கள் விரும்புவார்கள். அதுவே ஜேம்ஸ் கேமரூனிற்குக் கிடைத்த வெற்றி.

அவதார் 2 – வாரிசு பாசம்

Source: Cinema Dinamalar