Enna Solla Pogirai Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் என்ன சொல்லப் போகிறாய் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Enna Solla Pogirai Movie Review in Tamil

என்ன சொல்லப் போகிறாய் திரை விமர்சனம்

Producer – டிரைடன்ட் ஆர்ட்ஸ்
Director – ஹரிஹரன்
Music – விவேக் மெர்வின்
Artists – அஷ்வின், தேஜு அஷ்வினி, அவந்திகா மிஷ்ரா
Release Date – 13 ஜனவரி 2022
Movie Time – 2 மணி நேரம் 13 நிமிடம்

ஒரு படத்தைப் பற்றி மேடையில் பேசும் போதோ, பேட்டிகளில் பேசும் போதோ பார்த்துப் பேச வேண்டும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் நாயகன் அஷ்வின், “40 கதைகளைக் கேட்டு தூங்கிட்டேன், இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதித்தேன்,” என்றார். இப்போது படத்தைப் பார்த்துவிட்டு, இந்தக் கதையையா அப்படி ஒரு பிரமாதமான கதை எனச் சொன்னீர்கள் என அஷ்வினைக் கேள்வி கேட்டு பல மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வழக்கமான முக்கோணக் காதல் கதைதான். அதில் ஒரே ஒரு சுவாரசியமான விஷயத்தை மட்டும் சேர்த்துவிட்டு, மற்றபடி முழு படத்திலும் நம்மை நிறையவே சோதித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ஹரிஹரன். தன் முன்னாள் காதலி என ஒரு பொய்யை நாயகன் சொல்லப் போக, அந்தப் பொய்யே உண்மையாக மாறுவதுதான் அந்த ஒரே ஒரு சுவாரசியம்.

எம்எம் ரேடியோவில் ஆர்ஜே-வாக இருப்பவர் அஷ்வின். அவருக்கும் பெண் எழுத்தாளர் அவந்திகா மிஷ்ராவுக்கும் திருமணம் பேசப்படுகிறது. அஷ்வின், அவந்திகா இருவரும் சந்தித்துப் பேசும் போது காதலில் தோல்வியடைந்த ஒருவரைக் கல்யாணம் செய்வது சிறந்தது என்கிறார். அதனால், அஷ்வின் தனக்கு ஒரு காதலி இருந்ததாக பொய் சொல்லிவிடுகிறார். அவந்திகா அந்தக் காதலியைப் பார்க்க வேண்டும் எனச் சொல்ல, தேஜு அஷ்வினி என்பவரைப் பார்த்து நடிக்க வைக்க சம்மதம் வாங்குகிறார். தனது தாத்தா தனக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் படலத்தில் இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க, தேஜுவும் அஷ்வின் தான் தனது காதலன் என வீட்டில் பொய் சொல்கிறார். ஒரு கட்டத்தில் தேஜு மீது அஷ்வினுக்கு உண்மையாகவே காதல் வர அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். பேசாமல் மௌனமாக ஏதாவது ஒரு காட்சியாவது கடந்ததா என்பது பற்றி ஒரு போட்டியே வைக்கலாம். மாறி, மாறி யாராவது ஒரு காட்சியில் மூச்சு விடாமல் பேசுகிறார்கள்.

காதல் படங்களில் நடிக்கும் புதுமுகங்களிடம் காதல் என்பது இயற்கையாக அப்படியே வந்து கொட்ட வேண்டும். இந்தப் படத்தில் அஷ்வினிடம் காதல் நடிப்பு வரவழைக்கப்பட்டது போலத்தான் இருக்கிறது. இரண்டு அழகான பெண்கள், காதல் அப்படியே அடிவயிற்றிலிருந்து கரை புரண்டு வர வேண்டாமா ?. லேசாக சிரித்தாலும், பார்த்தாலும் போதும் அது காதல் என்று அஷ்வின் நம்பிவிட்டார் போலும். கதைக் கேட்டு தூங்காம, இரவெல்லாம் கண் முழித்து, நடித்து, நடித்து பயிற்சி பெறுங்கள் அஷ்வின்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் அவந்திகா மிஷ்ரா, தேஜு அஷ்வினி. அவந்திகா கொஞ்சம் மெச்சூர்டு தோற்றத்தில் இருக்கிறார். காதலிக்காமலேயே பல காதல் கதைகளை எழுதி, காதலைப் பற்றிப் புரிந்தவர், தெரிந்தவர் போலப் பேசி கடைசியில் காதலின் வலி என்ன என்பதை தானாக உணர்கிறார்.

அவந்திகாவை விட தேஜு அஷ்வினிக்குத்தான் வாய்ப்புகள் அதிகம். அழகாகவும் இருக்கிறார், உருக்கும் அளவிற்கு காதல் பார்வை பார்க்கிறார், தவிக்கிறார், அழுகிறார். ஆனாலும், இவரது கதாபாத்திரத்தில் இருக்கும் முரண், இவர் மீது அனுதாபத்தை வரவழைக்கவில்லை.

புகழ் இந்தப் படத்திலும் சிரிக்க வைக்க முடியாமல் ஏமாற்றுகிறார். என்னென்னமோ செய்து பார்க்கிறார், ஆனால், நமக்குத்தான் சிரிப்பு வர மாட்டேன் என்கிறது. சினிமா என்பது வேறு புகழ், அதை சரியாக அணுகுங்கள்.

படத்தில் மனமுவந்து தாராளமாகப் பாராட்டலாம் என நினைக்கத் தோன்றும் அளவிற்கு பாராட்டுக்களை அள்ளுபவர் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் மட்டுமே. விதவிதமான வண்ணமயமான லைட்டிங்குகள், அற்புதமான கம்போஸிங், ஒவ்வொரு காட்சியையும் ஒரு விளம்பரப் படம் போல படமாக்கியிருக்கிறார். விவேக் மெர்வின் இசையில் காதல் பாடல்கள் என ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கிறார்கள் ஆனால், மனதில் நிற்க மறுக்கிறது.

இடைவேளை வரை ஓரளவிற்காவது தாக்குப் பிடித்து உட்கார முடிகிறது. அதற்குப் பின் படம் எப்போது முடியும் என தவிப்பு வந்துவிடுகிறது. திரும்பத் திரும்ப ஒரே பிரச்சினையைப் பேசும் அலுப்பு.

Reference: Cinema Dinamalar