Anbarivu Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் அன்பறிவு படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்:

Anbarivu Movie Review in Tamil

அன்பறிவு திரை விமர்சனம்

Producer – சத்யஜோதி பிலிம்ஸ்
Director – அஷ்வின் ராம்
Music – ஆதி
Artists – ஆதி, காஷ்மிரா, ஷிவானி
Release Date – 7 ஜனவரி 2021 (ஓடிடி)
Movie Time – 2 மணி 45 நிமிடம்

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த அனைத்து இரு வேடப் படங்களையும் பொறுமையாகப் போட்டுப் பார்த்து அவற்றிலிருந்தே கொஞ்சம் கொஞ்சம் காட்சிகளை உருவி, சில பல கிராமத்துக் கதைப் படங்களின் காட்சிகளையும் உருவி, இந்தக் கால டிரென்டான சாதி மோதலையும், சேர்த்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் இந்த ‘அன்பறிவு‘.

இரண்டு ஊர், ஒன்றின் பெயர் அரசபுரம், மற்றொன்றின் பெயர் ஆண்டிபுரம். அரசபுரத்தின் பெரிய மனிதர் நெப்போலியன். அவரது மகள் ஆஷா சரத், ஆண்டிபுரத்தைச் சேர்ந்த வேற்று சாதிக்காரரான சாய்குமாரைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கிறது. தன் நண்பனான சாய்குமார் திடீரென பெரிய இடத்து மாப்பிள்ளை ஆனதைப் பொறுக்க முடியாத நெப்போலியன் வீட்டு வேலைக்காரரான விதார்த், ஒரு அரசியல் செய்து நெப்போலியன், சாய் குமாருக்கு இடையில் பகையை வளர்க்கிறார். பின்னர் நடக்கும் ஒரு சண்டையில் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு ஊரை விட்டே செல்கிறார் சாய்குமார். 24 வருடங்களுக்குப் பிறகு சாய்குமார் கனடாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார். அவரது மகனாக கல்லூரியில் படிக்கும் இளைஞனாக தம்பி ஆதி. இங்கு ஊரில் தாத்தா நெப்பேலியனால் அடிதடி, சண்டை என வளர்க்கப்படும் மற்றொருவர் அண்ணன் ஆதி. இதற்குப் பின் என்ன நடக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியாதா என்ன ?.

கிராமத்தில் வளரும் அண்ணன் ஆதியின் பெயர் அன்பு, கனடாவில் வளரும் தம்பி ஆதியின் பெயர் அறிவு. அதுதான் படத்தின் பெயர் அன்பறிவு. அன்பால் தான் எதையும் சாதிக்க முடியும் என அண்ணன் அன்புக்கு, தம்பி அறிவு எப்படி புரிய வைக்கிறார் என்பதுதான் படத்தில் நெகிழ வைக்கும் ஒரு விஷயம். அன்பே சிவம் என்பது போல அன்பே அறிவு.

வேட்டி, சட்டை, கழுத்தில் சில பல நகைகள், நெற்றியில் விபூதி, மதுரைத் தமிழில் நக்கலாகப் பேசினால் அண்ணன் அன்பு. ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட், கலைந்த தலை, கொஞ்சம் ஸ்டைலான ஆங்கிலம் பேசினால் தம்பி அறிவு. இரண்டிற்கும் முடிந்தவரையில் உடல்மொழி, நடை, பேச்சு என வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார் ஆதி. தாத்தா நெப்போலியன் மீதும், அம்மா ஆஷா சரத் மீதும் மட்டும் அதிக பாசம் வைத்துள்ளவர் அண்ணன். அவருக்கு பிரிந்து போன அப்பா பற்றிப் பேசினாலே கடும் கோபம் வரும். ஆனால், கனடாவில் அப்பாவால் வளர்க்கப்பட்ட தம்பி ஆதிக்கு ஒரு கட்டத்தில்தான் அம்மா பற்றிய உண்மை தெரிய வருகிறது. தமிழகத்திற்கு வந்து அம்மா, தாத்தாவுடன் சேர நினைப்பவருக்கு அவமானமே மிஞ்சுகிறது. பாசத்தால் சாதிக்க போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இரண்டு கதாபாத்திரங்களிலும் ஆக்ஷன், சென்டிமென்ட் என கிடைக்கும் வாய்ப்பில் ஸ்கோர் செய்கிறார் ஆதி.

படத்தில் இரண்டு கதாநாயகிகள், ஒருவர் காஷ்மிரா, மற்றொருவர் ஷிவானி. அண்ணன், தம்பிகள் இடம் மாறிய பிறகுதான் அவர்களுக்கு யார் ஜோடி என்பது தெரிய வருகிறது. கனடாவில் இருக்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக ஷிவானி. காட்சிகளும் மிகக் குறைவு, நடிக்கவும் வாய்ப்புகள் இல்லை. இங்கு ஊரில் இருக்கும் ஆதியின் முறைப் பெண்ணாக காஷ்மிரா, இவர் ஒரு டாக்டர். கனடாவில் இருந்து வரும் ஆதி, காஷ்மிராவைக் காதலிக்கிறார். இங்கிருந்து கனடாவிற்குச் செல்லும் ஆதி, அங்கு ஷிவானி பழகுவதால் காதலிக்கிறார் என நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். இருவருமே பெயருக்கு படத்தில் கதாநாயகிகள்.

90களில் நடித்த கிராமத்துப் பெரிய மனிதர் வேடத்தில் நெப்போலியன். எந்த மாற்றமும் இல்லை. விதார்த் திடீரென இப்படி வில்லனாக நடிக்க சம்மதித்ததன் காரணம் என்னவோ ?. வில்லத்தனம் பரவாயில்லை, ஆனால், எதற்காக அந்த 70களின் வில்லன்களைப் போல ஒரு சிரிப்பு. கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தில் மிரட்டியவர் ஆஷா சரத். அவரை கிராமத்து அம்மாவாக மாற்றி அழ விட்டிருக்கிறார்கள். இவரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு அவமானப்படும் வேற்று சாதிக்காரராக சாய்குமார். பின்னர் கனடாவில் பெரும் பணக்காரராக உயர்கிறார். சாய்குமார் நடிப்பை அவரது குரலே சரியாக வெளிப்படுத்திவிடும்.

ஆதி இசையில் அவருடைய படங்களில் எப்படியான பாடல்கள் இருக்குமோ இதிலும் அப்படியே தொடர்கிறது. ஆங்காங்கே சென்டிமென்ட் பாடல்களையும் உலவ விட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் அஷ்வின்ராமிற்கு பல விஷயங்கள் பற்றிய புரிதல் இல்லையா அல்லது புரிந்துமே, வெளிப்படைத் தன்மை இல்லாமல், எதற்கு வம்பு என்று அடக்கி வாசித்து காட்சிகளை வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. படத்தில் புதிதாக எந்தக் காட்சிகளுமே கிடையாது. இதற்கு முன் பல படங்களில் பார்த்த காட்சிகளே நிறைந்திருக்கிறது. படம் போகிறது, போகிறது போய்க் கொண்டேயிருக்கிறது. எப்போது முடியும் என கேட்கும் அளவிற்கு அப்படி ஒரு நீளம், இரண்டே முக்கால் மணி நேரம்.

அன்பால் எதையும் சாதிக்கலாம் என்ற நல்ல கருத்தை மதுரையில் ஆரம்பித்து, கனடாவிற்குச் சென்று, மீண்டும் மதுரைக்கு வந்து சுற்றி வளைத்து சொல்லியிருக்கிறார்கள்.

Reference: Cinema Dinamalar