777 சார்லி,777 Charlie

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் 777 சார்லி படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

777 Charlie Movie Review in Tamil

777 சார்லி திரை விமர்சனம்

Production – பரம்வா ஸ்டுடியோஸ்
Director – கிரண்ராஜ்
Music – நோபின் பால்
Artists – ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி
Release Date – 10 ஜுன் 2022
Movie Running Time – 2 மணி நேரம் 46 நிமிடம்

ஒரு மனிதனுக்கும், ஒரு நாய்க்கும் உள்ள பாசப் பிணைப்பை உருக வைக்கும் அளவிற்கு சொல்லியிருக்கும் படம் ‘777 சார்லி‘. கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ள படம். ஆனால், எங்குமே ஒரு டப்பிங் படம் பார்க்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாமல் நம்மை உணர்வு பூர்வமாய் கட்டிப் போட்டுவிடுகிறார் இயக்குனர் கிரண்ராஜ்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நாயை வளர்த்து வருபவர்கள் அவர்கள் நாய் மீது மேலும் அதிக பாசம் வைப்பார்கள். நாயை வளர்க்காதவர்கள் நாமும் ஒரு நாயை வீட்டில் வளர்க்கலாமே என்று ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அன்பான, பாசமான, அழகான, அற்புதமான நாயை படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் படம் பார்க்கும் ரசிகர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ரக்ஷித் ஷெட்டி சிறு வயதிலேயே தனது பெற்றோர், தங்கை ஆகியோரை விபத்தில் இழந்தவர். உறவு, நட்பு என எதுவும் இல்லாமல் வீட்டில் தனியாக வசிக்கிறார். வேலை பார்க்கும் கம்பெனி, வீடு என அவருடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவரிடம் எங்கிருந்தோ வரும் ஒரு நாய் யதேச்சையாக அடைக்கலம் ஆகிறது. முதலில் அந்த நாயை வெறுக்கும் ரக்ஷித் போகப் போக அந்த நாய் இல்லாமல் தானில்லை என்ற நிலைக்கு வருகிறார். அந்த சமயத்தில் நாய்க்கு கேன்சர் பாதிப்பு வருகிறது. கொஞ்ச நாட்கள்தான் அது உயிருடன் இருக்கும் என்கிறார் கால்நடை மருத்துவர். அதற்குள் அந்த நாயின் ஆசை ஒன்றை நிறைவேற்ற முயல்கிறார் ரக்ஷித். அது நடந்ததால் இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

2019ல் கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த “அவனே ஸ்ரீமன் நாராயணனா” படத்தின் மூலம் ஓரளவிற்கு அறியப்பட்டவர் இப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி. இந்தப் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்து காட்சிக்குக் காட்சி உருக வைக்கிறார். வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் வாழ்பவருக்கு ஒரு நாய் பிடிப்பாக வருகிறது. அந்த நாய் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை உணர்ந்து நடித்து உருக வைக்கிறார் ரக்ஷித். ஆசையாக வளர்க்கும் நாய் இன்னும் கொஞ்ச நாளில் இறந்துவிடும் என மருத்துவர் சொல்ல அதிர்ச்சியடைகிறார். டிவி பார்க்கும் போது பனிப்பிரதேசத்தைப் பார்த்து அந்த நாய் அடையும் மகிழ்ச்சியை ஏற்கெனவே பார்த்தவர், அந்த இடத்திற்கு நாயை அழைத்துச் சென்று மகிழ்ச்சிப்படுத்த நினைக்கிறார். அதற்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நெகிழ்ச்சிக்கு உத்தரவாதம்.

நாய் சார்லியின் நடிப்பைப் பார்க்கும் போது அதற்கு பயிற்சி கொடுத்த பிரமோத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். நாய் செய்யும் சேட்டைகளைப் பார்த்து அடடா, நாமும் இப்படி ஒரு நாயை வளர்க்க வேண்டும் என்று படம் பார்க்கும் பலருக்கும் தோன்றும். அடிக்கடி முன்னங்கால்களைத் தூக்கி ரக்ஷித் மீது காட்டும் பாசத்திற்கு நாமும் அடிமையாகிவிடுகிறோம். இடைவேளைக்குப் பின்னர் நாய் மீது நமக்கு அப்படி ஒரு அனுதாபம் வந்துவிடுகிறது. அதற்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என படம் பார்ப்பவர்கள் ‘உச்’ கொட்டும் அளவிற்கு காட்சிகள் அமைந்திருக்கிறது.

படத்தில் ரக்ஷித்திற்கும், நாய்க்கும் மட்டும்தான் அதிக முக்கியத்துவம். விலங்கு நல வாரிய அதிகாரியாக வரும் சங்கீதா சிருங்கேரியை படத்தின் நாயகி என்று சொல்லிக் கொள்ளலாம். டாக்டராக ராஜ் பி ஷெட்டி, சிறப்புத் தோற்றத்தில் பாபி சிம்ஹா, சிறுமி அத்ரிகாவாக ஷர்வரி கொஞ்சமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.

படத்திற்கு நோபின் பால் பின்னணி இசை, அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவு, பிரதீக் ஷெட்டியின் படத்தொகுப்பு பக்கபலமாக அமைந்துள்ளது.

இடைவேளைக்குப் பிறகான படத்தின் நீளம்தான் படத்திற்கான மைனஸ் ஆகத் தெரிகிறது.

குடும்பத்துடன், குட்டீஸ்களுடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு படம் ‘777 சார்லி’.

Reference: Cinema Dinamalar