'ஒய்-பிளஸ்' பாதுகாப்பு ஏன்? கங்கனா விளக்கம்

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

நடிகை கங்கனா ரணாவத்துக்கு அச்சுறுத்தல்கள் வந்ததால் அவருக்கு மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. தற்போது டுவிட்டரில் ஒருவர், “ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூரை தொடர்ந்து விமர்சித்து வரும் கங்கனா எங்கே? என்று பதிவு வெளியிட்டார்.

அதற்கு பதில் அளித்த சுப்பிரமணிய சாமி, “அவர் எங்கு இருக்கிறார் என்பது சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கே (எஸ்.பி.ஜி) தெரியும். இந்தி நடிகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது ‘எஸ்.பி.ஜி’ வேலை இல்லை. கங்கனாவுக்கு பாதுகாப்பு அளித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது” என்று கூறினார்.

அவருக்கு பதில் அளித்து கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இந்தி நடிகை மட்டுமல்ல சார். குரல் கொடுக்கும் அக்கறையான குடிமகள். மராட்டியத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் எனக்கு எதிராக உள்ளனர். நான் துக்டே குழுக்கள் பற்றி பேசி உள்ளேன். காலிஸ்தான் குழுக்களை கண்டித்துள்ளேன்.

நான் ஒரு தயாரிப்பாளர், எழுத்தாளர். எமர்ஜென்சி படத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை பேசி உள்ளேன். இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று பாதுகாப்பு கேட்டேன். கிடைத்து இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது சார்” என்று கூறியுள்ளார்.