எதிர்ப்பு எதிரொலி..! விஜய்யின் 'லியோ'  படத்தின் பாடலில் எச்சரிக்கை வாசகம் இணைப்பு

சர்ச்சையை தொடர்ந்து நான் ரெடி பாடலில் சிறிய மாற்றம் செய்துள்ளது லியோ படக்குழு

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதற்கிடையே, ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான்று லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான “ஆல்டர் ஈகோ நா ரெடி” பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. பாடல் வெளியான சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்தது. இப்பாடலில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளதால் எதிர்ப்பு கிளம்பியது.

‘லியோ’படத்தின் ‘நா ரெடி தான் வரவா’பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இருப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சர்ச்சையை தொடர்ந்து நான் ரெடி பாடலில் சிறிய மாற்றம் செய்துள்ளது லியோ படக்குழு . ‘நான் ரெடி’ பாடலில் ‘லியோ’ படக்குழு ஒரு சிறிய மாற்றத்தை செய்துள்ளது. யூடியூபில் இருக்கும் இப்பாடலில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.