'இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்குப் பார்வை பிரதமர் மோடியிடம் உள்ளது' - இளையராஜா

செங்கோல் சரியான இடத்திற்கு மீண்டும் வந்திருப்பது பெருமையை அளிக்கிறது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை,

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி(நாளை) திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருப்பதாக இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பிரதமர் நரேந்திர மோடி நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்கிறார். குடிமகனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த குறுகிய காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை கட்டுவதில் பங்காற்றியவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது, பிரதமர் மோடியின் உத்வேகமான தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் தருணத்தில், மாற்றத்திற்கான கொள்கைகள் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கான உறைவிடமாக திகழ வேண்டும் என நான் மனதார பிரார்த்திக்கிறேன்.

ராஜ்யங்களை வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்குப் பார்வை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக இருக்கும் பிரதமர் மோடியிடம் உள்ளது. அவருடைய கடமைக்கு உட்பட்ட செயல்களும் அதையே பிரதிபலிக்கின்றன. அவரது அனைத்து முயற்சிகளிலும் கடவுள் அவருடன் இருக்கட்டும். இந்த முக்கியமான தருணத்தில் அவரையும், இந்திய அரசையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு இளையராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.