துரிதம்: சினிமா விமர்சனம்
நடிகர்: ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிகை: ஆதிரா  டைரக்ஷன்: ஏ.ஆர்.கே.சரவணன் இசை: ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒளிப்பதிவு : தீபக் மேனன்

சூப்பர் ஹீரோ கதை என்ற அடையாளத்தோடு வந்துள்ள படம். பள்ளிப்பருவத்தில் இடி தாக்கி பாதிப்புக்கு உள்ளாகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். சிகிச்சைக்கு பிறகு தனக்குள் சூப்பர் ஹீரோ சக்தி உருவாகி இருப்பதை உணர்கிறார்.

சில வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்புகிறார். அவருடைய ஊர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்தான ஒரு திட்டத்தை அங்கு தொடங்க தனியார் நிறுவன உரிமையாளரான வினய் முயற்சி செய்கிறார். தனியார் நிறுவனத்தின் திட்டம் மூலம் கிராமத்துக்கு நேரிடப்போகும் பேராபத்தை அறியும் ஹிப் ஹாப் ஆதி தனது சூப்பர் பவர் மூலம் தடுத்து மக்களை காப்பாற்ற போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது மீதி கதை.

தலைப்பாகை, கவச உடை, கருப்பு குதிரை, மின்சாரம் பாய்ந்த கைகள் என கதாபாத்திரத்திற்கு நியாயமான பங்களிப்பை செய்து இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. அப்பாவி இளைஞன், சூப்பர் ஹீரோ என இரண்டு பரிமாணங்களை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தவும் தவறவில்லை. சண்டை காட்சிகளில் ஆக் ஷன் ஹீரோவாக தெறிக்க விடுகிறார். வினய் அனுபவ நடிப்பின் மூலம் அலட்டல் இல்லாமல் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். எதிரிகளிடம் மெல்லப்பேசி மெதுவாக கொல்லும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம் போல் இருக்கும் ஆதிரா அழகாக இருப்பதோடு நடிப்பு திறமையையும் பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். முருகானந்தம், முனீஸ்காந்த் ஆகிய இருவரும் காமெடிக்கு உத்தரவாதம் தருகிறார்கள். அரசு அதிகாரியாக வரும் சின்னிஜெயந்த் நடிப்பு கச்சிதமாக உள்ளது.

டீக்கடைக்காரராக வரும் காளிவெங்கட், வில்லனின் தம்பியாக வரும் பத்ரி, ஹீரோ நண்பராக வரும் சசி, ஊர் பிரமுகராக வரும் போஸ் வெங்கட் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக சித்தரித்து இருக்கலாம். தீபக் மேனனின் துல்லியமான ஒளிப்பதிவு படத்திற்கு விறுவிறுப்பை சேர்க்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.சூப்பர் ஹீரோ கதையை நகைச்சுவை கலந்து நேர்த்தியாக கொடுத்திருப்பதோடு துணிவுதான் உண்மையான வீரம் என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்.