நாங்குநேரி சம்பவம்: 3 டைரக்டர்கள் மீது எஸ்.வி.சேகர் புகார்

நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவர் சாதிமோதல் காரணமாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு சினிமா தான் காரணம் என்று 3 டைரக்டர்கள் மீது நடிகர் எஸ்.வி.சேகர் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து எஸ்.வி.சேகர் அளித்துள்ள பேட்டியில், “சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்கிறோம். ஆனால் நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவரை சாதி பிரச்சினையால் வீடு புகுந்து வெட்டி உள்ளனர். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சாதி என்றால் என்ன என்பது தெரிய வருகிறது. இதற்கு காரணம் சினிமாதான்.

அதிகமான சாதி படங்கள் எடுத்ததால் வந்த வினையால்தான் நாங்குநேரி சம்பவம் நடந்துள்ளது. இயக்குனர்கள் சாதி படங்கள் எடுக்கிறார்கள். இதை முதலில் ஆரம்பித்து வைத்தது டைரக்டர் முத்தையா. அவர் இயக்கிய கொம்பன் படத்தில் 96 சர்ச்சை காட்சிகளை நீக்கினேன். தொடர்ந்து பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் என்று பல இயக்குனர்கள் இதுபோன்ற படங்களை எடுக்க தொடங்கினார்கள். சாதியை உயர்த்துவதில் தவறு இல்லை. ஆனால் அடுத்தவரின் சாதியை தாழ்த்தி காட்டுவதுதான் தவறு. சாதி படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வெட்டுப்பட்ட மாணவருக்கு நிவாரண உதவி தொகை கொடுப்பார்களா?” என்றார்.