நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா: தேதி அறிவிப்பு

சென்னையில் நடிகர் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார்.

அவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி டிரண்டிங்கில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ‘லியோ’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 23-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பிரபலங்கள், ரசிகர்கள் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் அடுத்தவாரம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 1,500 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சி தொடங்குவது மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.