சாட் பூட் த்ரி : சினிமா விமர்சனம்
நடிகர்: வெங்கட் பிரபு நடிகை: சினேகா  டைரக்ஷன்: அருணாச்சலம் வைத்தியநாதன் இசை: ராஜேஷ் வைத்தியநாதன் ஒளிப்பதிவு : சுதர்ஷன் சீனிவாசன்

வெங்கட் பிரபு, சினேகா தம்பதியின் மகன் கைலாஷ் ஹீத் மற்றும் வேதாந்த், பிரணிதி ஆகியோர் ஒரே பள்ளியில் படித்து நட்பாக பழகுகிறார்கள்.

கைலாசுக்கு நாய்க்குட்டி வளர்க்க விருப்பம்.

கைலாஷ் ஆசையை நிறைவேற்ற அவரது பிறந்த நாளில் நண்பர்கள் நாய்க்குட்டி ஒன்றை வாங்கி பரிசாக கொடுக்கிறார்கள். நாய்க்குட்டியை வீட்டில் ஆசையோடு வளர்க்கிறார்.

அது பெரிய நாயாக வளர்ந்ததும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போகிறது. இதனால் தவிக்கும் கைலாஷ் நண்பர்களுடன் நாயைத்தேடி அலைகிறார்.

இன்னொரு பக்கம் மாநகராட்சி ஊழியர்கள் தெருவில் திரியும் நாய்களை மயக்க மருந்து கொடுத்து உயிரோடு புதைத்து விட முடிவு செய்கிறார்கள்.

அவர்கள் பிடியில் கைலாஷின் நாயும் சிக்குகிறது. நாயை கண்டுபிடித்தார்களா? அது உயிர் தப்பியதா? என்பது மீதி கதை…

சினேகா கண்டிப்பு, கறாரான அம்மா கதாபாத்திரத்தை ரசித்து செய்துள்ளார். வெங்கட் பிரபு மகனிடம் பாசம் காட்டுவது, மனைவி மனம் கோணாமல் நடப்பது என்று மென்மையான குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் நிறைவு.

யோகி பாபு சில இடங்களில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.

குழந்தை நட்சத்திரம் கைலாஷ் செல்லமாக வளர்த்த நாயை காணாமல் தவிக்கும் காட்சிகளில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

வேதாந்த் பண்ணும் சேட்டைகள் சிரிப்பு ரகம். பிரணிதியும் நடிப்பில் கவர்கிறார்

சிவாங்கி, சாய் தீனா, இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன், சுகேஷ் ஆகிய அனைவரும் தங்கள் வேலைகளை கச்சிதமாக செய்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் சீனிவாசன் குழந்தைகள் உலகத்தை வண்ணமயமாக காண்பித்திருக்கிறார்.

ராஜேஷ் வைத்தியநாதன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் பரவாயில்லை.

பிராணிகளிடம் அன்பு செலுத்த வேண்டும், குழந்தைகள் திறமையை பெற்றோர் கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும் என்ற கருவை வைத்து சிறந்த படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன்.

சிறுவர்களுக்கான படமாகவும் பெற்றோருக்கான பாடமாகவும் படத்தை கொடுத்துள்ள அவரது சமூக அக்கறையை பாராட்டலாம். மனிதர்கள் மீதான பிராணிகளின் நன்றி உணர்ச்சியை படமாக்கிய விதம் அருமை.