'விஷாலை வைத்து இனி படம் இயக்கவே மாட்டேன்' டைரக்டர் மிஷ்கின் திட்டவட்டம்

‘துப்பறிவாளன்-2’ படம் தொடர்பாக விஷால்-மிஷ்கின் இடையே சண்டை வெடித்தது. அதனைத் தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் மனவருத்தம் காரணமாக மிஷ்கின் அந்த படத்தில் இருந்து விலகினார். அந்த படத்தை விஷாலே தற்போது இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.பி.பிரகாஷ்குமார்-கவுரி கிஷன் ஆகியோர் நடித்துள்ள ‘அடியே’ படத்தின் பாடல்-டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்று பேசும்போது, விஷாலுடனான மோதல் குறித்து மனம் திறந்தார். அவர் பேசியதாவது:-

“என்னை பற்றி விஷால் பேசும்போதெல்லாம் ‘நான் துரோகத்தை மறக்கவே மாட்டேன்’ என்கிறார். நான் அப்படி என்ன துரோகம் செய்துவிட்டேன் என்று தெரியவில்லை. அதேவேளை விஷால் குறித்து நான் பேசிய வார்த்தையை இன்னும் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

என் இதயத்துக்கு நெருக்கமான விஷாலிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது. ஆனாலும் ஒருகட்டத்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டோம். நான் விஷாலை ரொம்ப ‘மிஸ்’ பண்றேன். ஆனால் அவர் என்னை ‘மிஸ்’ பண்ணமாட்டார். என்னை விட விஷாலுக்கு ‘ஈகோ’ ஜாஸ்தி. என்னுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், விஷாலின் படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தித்து கொண்டுதான் இருக்கி றேன்.

இதை சொல்வதால் விஷாலுக்கு நான் ஐஸ் வைப்பதாக எண்ணவேண்டாம். விஷாலை வைத்து சத்தியமாக இனி படம் இயக்கவே மாட்டேன். அவரிடம் போய் நிற்பது, கெஞ்சுவது போன்றவற்றை செய்யவே மாட்டேன்.

இவ்வாறு மிஷ்கின் பேசினார்.