விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படம் 'எல்.சி.யூ.'வில் வருமா? - லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்...

‘லியோ’ திரைப்படம் ‘எல்.சி.யூ.’வில் வருமா? என்ற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார்.

கோவை,

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். இந்த படத்தில் இருந்து நடிகர் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் அண்மையில் வெளியாகி யூ-டியூபில் சுமார் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

‘லியோ’ படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. இதற்கு முன் லோகேஷ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய திரைப்படங்களின் கதை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக அமைந்திருந்தது. ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சினிமேட்டிக் யூனிவர்ஸ் கதைகளைப் போல் இதனை ரசிகர்கள் ‘எல்.சி.யூ.’ என்று அழைத்து வருகின்றனர். தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படமும் இந்த ‘எல்.சி.யூ.’ வில் வருமா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களோடு கலந்துரையாடினார். அப்போது லோகேஷிடம், ‘லியோ படம் ‘எல்.சி.யூ.’ வில் வருமா?’ என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. இப்போதே அனைத்தையும் சொல்லிவிட்டால், பின்னர் சொல்வதற்கு வேறு எதுவும் இருக்காது. அதனால் கொஞ்சம் காத்திருங்கள்” என்று பதிலளித்தார்.