'ரியல் பேன் பாயாக மாறிய நடிகர் விஜய்' - ஈக்குவலைசர் 3 படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்த்து ரசித்தார்...!

அமெரிக்கா சென்றுள்ள விஜய் , ஹாலிவுட் படமான ஈக்குவலைசர்-3 படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்த்து ரசித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

நடிகர் விஜய்-ன் 67 வது திரைப்படம் லியோ. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்தப்படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ம் தேதி ரீலிசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விஜயின் 68வது படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய்யுடன் நடிகை ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக வெங்கட் பிரபு, விஜய் உள்ளிட்ட படக்குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளது. அங்கு 3டி விஎப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் அங்கு விஜய் பேன் பாய் மோடுக்கு மாறியுள்ளார். பொதுஇடங்களிலும் படப்பிடிப்பிலும் ரொம்பவே அமைதியாக இருக்கும் விஜய், நண்பர்களுடன் மட்டுமே ஜாலியாக இருப்பார் என சொல்லப்படுகிறது. அதேநேரம் விஜய் படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருப்பது தான் வழக்கம். ஆனால், அமெரிக்கா சென்றுள்ள விஜய் , ஹாலிவுட் படமான ஈக்குவலைசர்-3 படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்த்து ரசித்துள்ளார்.

அதுவும் ரியல் பேன் பாய் மோடுக்கு மாறியுள்ள அவர், படம் ஓடிக்கொண்டிருக்கும் போது எழுந்துநின்று அப்ளாஸ் செய்துள்ளார். இதனை போட்டோ எடுத்துள்ள வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். விஜய்யின் இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.