மீண்டும் திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்...!

1980 மற்றும் 90-களில் கொடி கட்டி பறந்த பல முன்னாள் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் இப்போதும் சினிமாவில் ஜொலிக்கிறார்கள்.

சினிமா இப்போது டிஜிட்டலுக்கு மாறியுள்ளது. ஆனாலும் படங்களை பிலிம்மில் எடுத்த காலகட்டத்தை சினிமாவின் பொற்காலம் என்றும், அந்த காலத்து நடிகர்-நடிகைகளை பொற்கால நட்சத்திரங்கள் என்றும் திரைப்பட ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.

யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம் என்ற நிலையில் திரையுலகம் தற்போது எல்லோருக்கும் எட்டும் தூரத்தில் இருந்தாலும், இன்றைய நட்சத்திரங்களின் சினிமா வாழ்க்கை நீண்ட காலம் நீடித்திருப்பதில்லை.

கருப்பு, வெள்ளை காலத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் ஆகட்டும், சினிமாவை கலரில் எடுக்க ஆரம்பித்த காலமாகட்டும் அப்போதைய நடிகர்கள் நடிப்பு பயிற்சி, நாடக பயிற்சி பெற்றவர் கள், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் என்ற தகுதிகளோடு வந்தனர். அதனால் சினிமாவில் நீடித்து நிற்க முடிந்தது.

இப்போது நடிக்க ஆர்வம் இருந்தாலும் அதற்கான பயிற்சி இல்லை. அதன் காரணமாக ஓரிரு வெற்றியை பார்த்துவிட்டு அப்படியே அமைதியாக சினிமாவை விட்டு விலகி விடுகின்றனர்.

அந்த வகையில் 1980 மற்றும் 90-களில் கொடி கட்டி பறந்த பல முன்னாள் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் இப்போதும் சினிமாவில் ஜொலிக்கிறார்கள். அவர்களில் சிலரை பற்றிய விவரம்:-

மோகன்: தமிழ் சினிமாவில் உடலை வருத்தி நடிப்பவர்கள் மத்தியில் அலட்டிக்கொள்ளாமல் நடித்த மோகனின் `பாடி லாங்குவேஜ்’ ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாடல் காட்சிகளில் உணர்வுகளை அப்படியே ஒரு தேர்ந்த பாடகரைப் போல் வெளிப்படுத்தி இருப்பார். பல சில்வர் ஜூப்ளி வெற்றியை கொடுத்தார். இப்போதும் அவருக்கு மவுசு உள்ளது. தற்போது ‘ஹரா’, விஜய் நடிக்கும் படம் என பிசியாக இருக்கிறார்.

கார்த்திக்: வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும் திறமையாலும் தனக்கான ஒரு இடத்தை அமைத்துக் கொண்ட கார்த்தி பல வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் ஹீரோ. இப்போது ‘தீ இவன்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

அர்ஜுன்: தமிழ் சினிமாவை ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் ஆக்கிரமித்து இருந்த காலகட்டத்திலேயே தன்னுடைய அதிரடியான சண்டைக் காட்சிகள் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் `ஆக்ஷன் கிங்’ என்று அழைக்கப்படும் அர்ஜுன். சில வருடங்களுக்கு முன் அஜித் படத்தில் வில்லனாக நடித்த இவர், இப்போது ‘லியோ’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வரவேற்பு பெற்றார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சத்யராஜ்: பல ஆண்டு காலமாக தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ் ‘பாகுபலி’க்கு பிறகு பல மொழி இயக்குனர்களும் தேடும் ஒரு பிசியான நடிகராக மாறி யுள்ளார்.

ராமராஜன்: பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ராமராஜன் இப்போது ‘சாமானியன்’ படத்தில் நடித்து வருகிறார்.

ரகுமான்: ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் ரகுமான். ‘துருவங்கள் பதினாறு’ இவருடைய கம்பேக் படமாக அமைந்தது. தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ‘சமரா’ படம் வெளியானது.

ராதிகா: யதார்த்தமான நடிப்பால் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்திய ராதிகா இப்போது முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார்.

ரம்யா கிருஷ்ணன்: தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நடிகை ரம்யா கிருஷ்ணனின் `படையப்பா’ நீலாம்பரி கேரக்டர் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் இவருடைய அமைதியான நடிப்பு ரசிகர் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

இதுபோல் மீனா, பூர்ணிமா ஜெயராம், நதியா உள்ளிட்ட மேலும் பல முன்னாள் கதாநாயகிகள் தற்போது குணசித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்கள்.