மீண்டும் தாமதமாகும் இந்தியன் 2 ரிலீஸ்...?

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பல்வேறு தடைகளை தாண்டி தயாராகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பல்வேறு தடைகளை தாண்டி தயாராகி உள்ளது. ஆரம்பத்தில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தினர். மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியபோது கிரேன் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டது.

அதன்பிறகு பிரச்சினை கோர்ட்டுவரை சென்று படப்பிடிப்பை திரும்பவும் ஆரம்பித்தனர். சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன.

இந்தியன் 2 படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தாகவும் கிராபிக்ஸ் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரிலீசை சுதந்திர தினத்துக்கு தள்ளி வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

இந்தியன் 2 படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.