மீண்டும் இந்தி படத்தில் நயன்தாரா?

நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார். இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்கவும் நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.

தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியதோடு நயன்தாராவை இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது.

இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்கவும் நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. புகழ்பெற்ற இந்தி டைரக்டரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி பெரிய பட்ஜெட்டில் பைஜூ பாவ்ரா என்ற பிரமாண்ட படத்தை எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

இதில் நாயகனாக ரன்வீர் சிங், நாயகியாக அலியாபட் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தில்தான் நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பது சம்பந்தமாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சஞ்சய்லீலா பன்சாலியை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இதில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டால் படத்துக்கு மேலும் பரபரப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளது.