மாமன்னன் - சினிமா விமர்சனம்
நடிகர்: வடிவேலு,உதயநிதி ஸ்டாலின்,பகத் பாசில் , நடிகை: கீர்த்தி சுரேஷ் ,கீதா கைலாசம், ரவீனா ரவி  டைரக்ஷன்: மாரி செல்வராஜ் இசை: ஏ.ஆர்.ரகுமான் ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்

சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் வடிவேலு. அவரது மகன் உதயநிதி அடிமுறை சண்டை கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருந்து பன்றி வளர்ப்பு தொழிலும் செய்கிறார். அதே மாவட்டத்தில் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளராக பதவி வகிக்கும் பகத் பாசில் ஆதிக்க வர்க்கம் மனப்பான்மை கொண்டவர். தனது எதிரில் வடிவேலுவை உட்கார விடுவது இல்லை.

இலவச கல்வி மையம் நடத்தும் கல்லூரி தோழியான கீர்த்தி சுரேசுக்கு ஒரு பிரச்சினையில் உதயநிதி உதவப்போய் பகத்பாசிலுக்கு பகையாளி ஆகிறார். இதனால் இருவருக்கும் ஏற்படும் சமூக, அரசியல் பிரச்சினைகளும் அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதும் மீதி கதை.

படத்தின் அறிவிக்கப்படாத நாயகனாக வரும் வடிவேலு. நடை, உடை, பாவனையில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனிடம் ஒருவிதமான ரியாக்ஷன், வில்லனிடம் இன்னொரு ரியாக்ஷன் என இதுவரை பார்க்காத வடிவேலுவாக வியப்பில் ஆழ்த்துகிறார்.

இறுகிய முகம், அளந்து பேசும் வார்த்தைகள் என்று கதாபாத்திரத்தில் அழுத்தமாக பொருந்தி இருக்கும் உதயநிதிக்கு இது மிக முக்கிய படம். நீதிக்காக குரல் கொடுக்கும் இடங்களில் எரிமலையாக வெடிக்கிறார். ஆதிக்க வர்க்கம் முன் கூனி குறுகி நிற்கும் தந்தையை தலை நிமிரச் செய்ய அவர் எடுக்கும் ஒவ்வொரு அடியும் எதிர் அணியில் இடி மாதிரி இறங்குகிறது.

படத்துக்கு படம் கன்னக்குழி சிரிப்பு, கண் ஜாடை என கலாட்டா பண்ணும் கீர்த்தி சுரேஷுக்கு உரிமைக்குரல் எழுப்பும் கனமான வேடம். அதை அவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

நாயை இரக்கமின்றி அடித்து கொல்லும் வில்லத்தனத்தோடு அறிமுகமாகும் பகத் பாசிலின் ஆதிக்கம் படம் முழுக்க நிறைந்திருக்கிறது. எல்லோரும் தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு பிரமாதம்.

விஜயகுமார், அழகம் பெருமாள், கீதா கைலாசம், ரவீனா ரவி, லால் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவு.

பன்றிகள் சம்பந்தமான காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். சில காட்சிகளை முன்கூட்டி யூகிக்க முடிகிறது.

மண் சார்ந்த கதைக்கு தரமான இசை கொடுத்திருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பங்களிப்பு படத்தை முழுமைப்படுத்துகிறது. பாடல்கள், பின்னணி இசை என எல்லாவற்றிலும் அவரது இசை படத்துக்கு ஆகச் சிறந்த பலம்.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் சேலத்தை படம் பிடித்த விதம் சிறப்பு.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளை பேசும் சிறந்த படைப்பாக உருவாக்கி உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிளைமாக்ஸ் கைதட்ட வைக்கிறது.