'மட்டன் சமோசா' சாப்பிடப் போட்டி

“1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படம் எங்களது பாடலி தியேட்டரில் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய மு.கருணாநிதி, கதாநாயகனாக அறிமுகமான சிவாஜி கணேசன், அவர்களின் நண்பர் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் அப்போது சிதம்பரத்தில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் கடலூர் வழியாக சென்னைக்கு போய்க் கொண்டு இருந்தார்கள். அப்போது எங்களது பாடலி தியேட்டரில் பராசக்தி படம் 100 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. உடனே 3 பேரும் தியேட்டருக்கு வந்துவிட்டார்கள்.

எந்தத் தகவலும் இல்லாமல் திடீர் என்று அவர்கள் நேரில் வந்ததைப் பார்த்து எங்களுடைய தந்தை செய்வதறியாது ஒருவகை மகிழ்ச்சியால் திகைத்துப் போனார். பின்னர் இடைவேளையின் போது 3 பேரையும் திரை முன்பு அழைத்துப் போனார், அவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். அவர்களை நேரில் பார்த்த ரசிகர்கள், நம்ப முடியாமல் வியப்புடன் அருகில் போய்ப் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் கூச்சல் போட்டார்கள்.

இதற்கிடையே கருணாநிதி, சிவாஜி கணேசன், கண்ணதாசன் ஆகியோர் தியேட்டருக்கு வந்த தகவல் ‘கிடுகிடு’ வெனப் பரவ, கடலூர் நகர மக்களும், அருகில் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் தடபுடலாக தியேட்டருக்கு ஓடிவந்தனர். இதனால் தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு 3 பேரும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.

அவர்களைப் பார்க்க தியேட்டருக்கு வந்தவர்கள் பலர் ரெயிலை தவறவிட்டனர். அப்போது எல்லாம் இவ்வளவு ரெயில்கள் கிடையாது. எப்போதாவது ஒன்றுதான் வரும். அதனால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இரவில் தூங்கிவிட்டு, மறுநாள்தான் பயணத்தைத் தொடர்ந்து இருக்கிறார்கள்.

எங்கள் தியேட்டருக்கு வந்துபோன பிறகு கருணாநிதி, சிவாஜியுடன் என்னுடைய தந்தையாருக்கு நட்பு நெருக்கமானது. சென்னை செல்லும்போது எல்லாம் கருணாநிதி, சிவாஜி இருவரையும் அழைத்துக் கொண்டு சென்னை மெரினா கடற்கரை அருகில் இருந்த பிலால் ஓட்டல் என்று நினைக்கிறேன். அங்குபோய் மட்டன் சமோசா சாப்பிடுவார்களாம். அப்போது அதை யார் அதிகம் சாப்பிடுகிறார் பார்க்கலாமா? என்று 3 பேரும் போட்டி போடுவார்களாம்! ருசிகரமான இந்தத் தகவல்கள் எல்லாம் என்னுடைய தந்தையார் கூறக் கேட்டவை. மனதைவிட்டு நீங்காதவை!” என்று சொன்னார், 75 வயதாகும் சங்கர்.