மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: மதுரை சிந்தாமணி

சிந்தாமணி…

-இலக்கியத்திலும், சினிமாவிலும் இந்தப் பெயருக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. அப்போதைய சினிமா சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரை புகழ் அரியணையில் அமரவைத்து அழகு பார்த்தது, இந்தச் சிந்தாமணி என்ற பெயர்தான் என்பது வரலாறு.

ஆம்! 1937-ம் ஆண்டு பாகவதர் நடித்த சிந்தாமணி என்ற திரைப்படம், தீபாவளி அன்று வெளியாகி, மறு தீபாவளியையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

மதுரையில், அப்போது இருந்த சில தியேட்டர்களில் ஒன்றான சிட்டி சினிமாவில் அந்தப் படம் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

அதில் சிந்தாமணி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியவர் பழம்பெரும் நடிகையான அஸ்வத்தம்மாதான். ஆனால், தியாகராஜ பாகவதரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அப்போது மதுரையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கிய ‘ராயல் டாக்கீஸ்’ என்ற நிறுவனம்தான் அந்தப் படத்தை தயாரித்தது. அதன் உரிமையாளர்கள் என்.எம்.ஆர். சகோதரர்களான வெங்கடகிருஷ்ணய்யர், சுப்பராமன், சந்திர சேகர், கிருட்டிணமூர்த்தி ஆகியோர் ஆவர்.

தமிழகம் முழுவதும் சிந்தாமணி படம் சக்கைப்போடு போட்டது. அவர்கள் எதிர்பார்த்த வசூலைவிட அதிகமாக ஈட்டிக்கொடுத்தது. அந்த லாபத் தொகையை எப்படித் திரைப்படத் தொழிலில் பயன்படுத்துவது என ஆலோசித்தனர். ஏற்கனவே சிட்டி சினிமா தியேட்டரை அவர்கள் 4 பேரும் குத்தகைக்கு எடுத்துத்தான் நடத்திவந்தனர். எனவே அந்த லாபத் தொகையில் புதிதாக ஒரு தியேட்டரைக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

மதுரை கீழவெளி வீதியில் தியேட்டரை கட்டுவது என்று தீர்மானத்துக்கு வந்தார்கள். 1938-ல் கட்டுமான பணியை தொடங்கினார்கள். அதற்கு முன்மாதிரியாக இருந்தது, லண்டனில் உள்ள ஒரு திரையரங்கம்தான்.

1936-ம் ஆண்டில் தியேட்டர் நிர்வாகத்தினர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தனர். லண்டன் சென்ற அவர்களுக்கு அங்குள்ள ‘ஓடியான்’ என்ற தியேட்டரில் படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.

அந்தத் தியேட்டர், அதில் இருந்த வசதிகள், தொழில்நுட்பங்கள் அவர்களைக் கவர்ந்தன.

புதிய தியேட்டரைக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தபோது, அவர்களின் மனதில் தோன்றியது, லண்டன் ஓடியான் தியேட்டர்தான். எனவே மீண்டும் ஒருமுறை அங்கு சென்று அந்த தியேட்டரின் வசதிகளைப் பார்த்துவந்து, மதுரையில் வடிவமைக்கப்பட்டதுதான் சிந்தாமணி என்கிற, புதிய தியேட்டர்.

1939-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதி முதல் மதுரை சினிமா ரசிகர்களுக்கு அது விருந்துபடைக்கத் தொடங்கியது. அதன்பிறகு தமிழ்நாட்டிலும், வெளி மாநிலங்களிலும் பல தியேட்டர்களின் கட்டிட வடிவமைப்புக்கு சிந்தாமணி தியேட்டர் முன்மாதிரியாக இருந்தது என்பது வேறு கதை!

சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல் விருந்து படைத்துவந்த அத்தியேட்டர், பின்நாட்களில் குத்தகைக்கு விடப்பட்டு ஓடிக்கொண்டு இருந்தது.

2008-ம் ஆண்டு வரை அதாவது கிட்டத்தட்ட 68 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய அந்தத் தியேட்டர், பின்னர் இடிக்கப்பட்டு அங்கு ராஜ்மகால் ஜவுளிக்கடை தோன்றிவிட்டது. இருந்தாலும் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளை அடையாளம் காட்ட, மதுரை மக்கள் இன்னமும் சிந்தாமணி பெயரைத்தான் சொல்கிறார்கள்.