போதைபொருள் வழக்கு: சினிமா தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் அம்மா- மகள் நடிகைகள்

போதைபொருள் வழக்கில் சிக்கிய சினிமா தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் நடிகைகள் அம்மா- மகள் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐதராபாத்,

சில வருடங்களுக்கு முன்பு போதைப்பொருள் சர்ச்சை தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் சில முன்னணி பிரபலங்களிடம் போலீசார் போதைபொருள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இப்போது தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரியின் வடிவத்தில் மீண்டும் போதைப்பொருள் ஊழல் குறித்த சர்ச்சை எழுந்து உள்ளது. இவர் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டவர்.

சில நாட்களுக்கு முன்பு, சைபராபாத் போலீசார் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் கே.பி.சவுத்ரியிடம் இருந்து போலீசார் முக்கிய தகவல்களை பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. அவரது போனை சோதனை செய்த போலீசார், பரபரப்பு விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளனர்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஒருவருடனும், வேறு சில நடிகைகளுடனும் கே.பி.சவுத்ரி நூற்றுக்கணக்கான முறை பேசியதாக தெரிகிறது.

வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கே.பி.சவுத்ரி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 12 பிரபலங்களுடன் தொலைபேசியில் உரையாடியதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கூகுள் டிரைவ் அடிப்படையில் முக்கிய விஷயங்களை போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர். கே.பி.சவுத்ரி பெங்களூர் மற்றும் கோவாவில் இருந்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.

பிரபலங்களை குறிவைத்து வார இறுதி பார்ட்டிகளில் கே.பி.சவுத்ரி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.

இதுவரை அசுரெட்டி, சினிமா நடிகை ஜோதி, பஞ்சாகுட்டா புஷ்பக் கேப்ஸ் உரிமையாளர் ரத்தன் ரெட்டி ஆகியோரிடம் கே.பி.சவுத்ரி பலமுறை போனில் பேசியதாக தெரிகிறது.

பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மகன்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக விசாரணையில் கே.பி.சவுத்ரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு நாயகி ஒருவரும், தெலுங்கில் சில ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடிய மற்றொரு ஹீரோயினும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹீரோயின்கள் யார் என்ற விவரத்தை வெளியிட போலீசார் தயாராக இல்லை. அவர்கள் உண்மையில் போதை மருந்து உட்கொண்டார்களா? என போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது பிரபல நடிகை சுரேகா வாணியின் மகள் சுப்ரீதா மற்றும் கே.பி.சவுத்ரியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில், சுப்ரீதா சவுத்ரியுடன் நெருக்கமாக இருக்கிறார், மற்றொரு படத்தில், அவர் அவரை முத்தமிடுகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் போதைப்பொருளுடன் தொடர்புடையது அல்ல என்று அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் போலீஸ் விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.