துரிதம்: சினிமா விமர்சனம்
நடிகர்: எஸ்.ஜே.சூர்யா நடிகை: பிரியா பவானி சங்கர்  டைரக்ஷன்: ராதா மோகன் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்

துணிக்கடை பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓவியராக வேலைபார்க்கும் எஸ்.ஜே.சூர்யா உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் மாத்திரை எடுப்பதை நிறுத்தி விட பிரச்சினைகள் தலைதூக்குகிறது. கம்பெனியில் உள்ள ஒரு பொம்மைக்கு புருவம், நெற்றியில் சாயம் வரைய முற்படுகிறார்.

அப்போது அந்த பொம்மை சிறுவயதில் தன்னுடன் அன்பாக பழகி திருவிழா கூட்டமொன்றில் காணாமல் போன பள்ளித்தோழி நந்தினியாக அவரது கண்களுக்கு தெரிகிறது. இதனால் அந்த பொம்மையோடு பேசுகிறார். பழகுகிறார். காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். பொம்மையும் அவரோடு பேசுவதுபோல் கற்பனை செய்கிறார்.

ஒரு நாள் எஸ்.ஜே.சூர்யா ஊருக்கு சென்று விட்டு திரும்பும்போது அந்த பொம்மை காணாமல் போகிறது. இது அவரது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டு குற்ற சம்பவங்களில் தள்ளி விடுகிறது, பொம்மையை கண்டுபிடித்தாரா என்பது மீதி கதை.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு பொம்மையை காதலிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரம். அதில் அசத்தலான நடிப்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார். பொம்மையுடன் மனம் உருக பேசி குதூகலிப்பது, அதை காணாமல் பரிதவித்து தேடி அலைவது, காதல் பொம்மையை தொட்டு பேசுபவரை வெறி கொண்டு தாக்குவது என்றெல்லாம் அபாரமான நடிப்பை வழங்கி உள்ளார்.

பொம்மையாக வரும் பிரியா பவானி சங்கர் அழகில் வசீகரிக்கிறார். கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பையும் வழங்கி இருக்கிறார். சாந்தினி தமிழரசன் சிறிது நேரம் வந்தாலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் சம்பந்தமான கற்பனை காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கி இருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பலம். தெய்வீக ராகம் ரீமிக்ஸ் பாடல் மனதை வருடுகிறது. ரிச்சர்ட் எம்.நாதன் கேமரா காட்சிகளை அழகாக வடித்துள்ளது.

பொம்மை மீது வரும் வித்தியாசமான உளவியல் காதல் கதையை விறுவிறுப்பாக படமாக்கி உள்ளார் இயக்குனர் ராதா மோகன். கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.