பீட்சா 3
நடிகர்: அஸ்வின்,காளிவெங்கட் நடிகை: பவித்ரா மாரிமுத்து,அனுபமா குமார்,கவிதா பாராதி  டைரக்ஷன்: மோகன் கோவிந்த் இசை: அருண் ராஜ். ஒளிப்பதிவு : பிரபு ராகவ்

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள அஸ்வின் ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டலில் ஒரு பொம்மை வைக்கப்படுகிறது. அந்த பொம்மையின் வருகைக்கு பிறகு அஸ்வினை சுற்றியும் அவர் நடத்தும் ஓட்டலை சுற்றியும் சில அமானுஷ்ய சக்திகளின் விளையாட்டு ஆரம்பமாகிறது.

அதன் தொடர்ச்சியாக சில கொலைகளும் நடக்கிறது. அஸ்வினை போலீஸ் சந்தேக்கிறது. கொலைகளை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலை பழியிலிருந்து அஸ்வின் தப்பித்தாரா? என்பது மீதி கதை.

பக்கத்து வீட்டு பையன் தோற்றத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் அஸ்வின். கொலை பழி தன் மீது வீழ்ந்த பிறகு பதட்டப்படாமல் உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பதில் காட்டும் வேகம், பாதிக்கப்பட்டவருக்கு நடந்த கொடுமையை அறிந்து புழுவாக துடிப்பது, காதல், விரக்தி, கோபம், பரிவு என உணர்வுகளின் அத்தனை அம்சங்களையும் பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பவித்ரா மாரிமுத்து அழகாக இருக்கிறார். கிடைத்த கொஞ்ச வாய்ப்பை சரியாகவும் பயன்படுத்தியுள்ளார்.

அம்மாவாக வரும் அனுபமா குமாருக்கு அனுதாபத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வேடம். அதை அவரும் நேர்த்தியாக செய்துள்ளார்.

அப்பார்ட்மெண்ட் செகரெட்டரியாக வரும் கவிதா பாராதி, போலீஸ் அதிகாரியாக வரும் கவுரவ், மாணவியாக வரும் அபி நட்சத்திரா, நூலகராக வரும் செய்மூர், காளிவெங்கட் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மகளின் பலகீனம் தெரிந்தும் தாய் கூடுதல் கவனம் செலுத்த தவறியது உள்பட படத்தில் சில இடங்களில் விடை தெரியாத கேள்விகள் இருப்பது பலகீனம்.

அடுக்குமாடி குடியிருப்பு, மின் தூக்கி, ஓட்டல் என படத்தில் சில லொக்கேஷன்களே வந்தாலும் அதையெல்லாம் அழகாக, திகிலாக, பார்வையாளர்களுக்கு கடத்துகிறது பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு.

பயமுறுத்த வேண்டிய காட்சியில் பயத்தை ஏற்படுத்துகிறார் இசையமைப்பாளர் அருண் ராஜ்.

வழக்கமான பழிவாங்கும் பேய் கதையை கொஞ்சம் பரிதாபம், பயம், சென்டிமென்ட் என கமர்ஷியல் அம்சங்களை அளவாக சேர்த்து ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் கோவிந்த்.