பார்த்திபனுடன் இணைகிறாரா சுருதிஹாசன்... வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்...!

நடிகை சுருதிஹாசனுக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படத்தை பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய ‘இரவின் நிழல்’ திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசை அமைக்கிறார். அதனை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் நடிகை சுருதிஹாசனுக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் ‘சகலகலாவல்லிக்கு எதற்கு பூங்கொத்து?’ என பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘உங்களின் புதிய படத்தில் சுருதிஹாசன் நடிக்கிறாரா..?’ என கேள்வி எழுப்பினர்.

பின்னர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக விரிவான பதிவு ஒன்றை நேற்று இரவு பதிவிட்டிருந்தார். அதில் இப்போதைக்கு ஒரு பாடலின் போதைக்கு சுருதி ஒரு பாடல் மட்டும் பாட வந்தார் ஆனால், பின் என்ன நடந்தது. அது நாளை….’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.