வெப்: சினிமா விமர்சனம்
நடிகர்: ஆதி, யோகி பாபு நடிகை: ஹன்சிகா  டைரக்ஷன்: மனோஜ் தாமோதரன் இசை: சந்தோஷ் தயாநிதி ஒளிப்பதிவு : ஷபீர் அகமது

கிராமத்தில் அப்பா, தங்கையுடன் வசிக்கிறார் ஆதி. குடும்பம் கடனில் தத்தளிக்கிறது. கடன் கொடுத்தவர் அசலையும் வட்டியையும் தரவில்லை என்றால் உங்கள் வீட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்வேன் என்று அடவடித்தனம் செய்கிறார். இதனால் பணத்தை புரட்டுவதற்காக சென்னையில் இருக்கும் நண்பன் யோகிபாபுவை சந்திக்க புறப்படுகிறார் ஆதி. அங்கு யோகிபாபு சட்டத்துக்கு விரோதமான செயல்களை செய்து பிழைப்பு நடத்துவதை அறிகிறார். வேறு வழியில்லாமல் அவரது செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறார். அப்போது விஞ்ஞானி பாண்டியராஜனின் ஆய்வகத்தில் உள்ள ஒரு விசேஷ கண்டுபிடிப்பின் ரகசியத்தை திருடிக் கொடுத்தால் பணம் தருவதாகச் சொல்கிறார் வில்லன்,

ஆதியும், யோகிபாபுவும் பணம் வாங்கிக்கொண்டு காரியத்தில் இறங்குகிறார்கள். அதில் சில பிரச்சினைகள் வருகிறது.

பணம் கொடுத்த வில்லன், தங்கையை கல்யாணம் செய்து கொள்வேன் என்று மிரட்டும் வட்டிக்காரன், விஞ்ஞானி என பல சிக்கல்களை சந்திக்கும் ஆதி அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது மீதி கதை.

நீண்ட நாட்ளுக்கு பிறகு ஆதியை திரையில் பார்த்தாலும் அதே இளமையுடன் இருக்கிறார். நகைச்சுவை நாயகன் வேடம் என்பதால் முடிந்தளவுக்கு சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார். மிகைப்படுத்தாத நடிப்பு பலமாக அமைந்துள்ளது. தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார் ஹன்சிகா. பெண்ணாக இருந்து ஆணாகவும், ஆணாக இருந்து பெண்ணாகவும் வெளிப்படுத்த வேண்டிய சிக்கலான கதாபாத்திரத்தை சிம்பிளாக கையாண்டு கவனிக்க வைக்கிறார். தனது நடிப்புத்திறமையை மொத்தமாக இந்த ஒரே படத்தில் கொடுத்து அசத்தியுள்ளார்.

படத்தின் இரண்டாவது நாயகன் எனுமளவுக்கு படம் முழுக்க வருகிறார் யோகிபாபு. வழக்கம்போல் அலட்டிக்கொள்ளாமல் சிரிக்க வைக்கிறார். இன்னொரு நாயகியாக வரும் பாலக் லால்வாணிக்கு வாய்ப்பு மிக குறைவு.

ரவிமரியா, பாண்டியராஜன், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான்விஜய், தங்கதுரை, ரோபோ சங்கர், முனிஸ்காந்த் என அனைவரும் சிரிக்க வைக்கும் வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள்.

சில இடங்களில் வரும் தேவையில்லாத ஆபாச குறியீடு, இரட்டை அர்த்த வசனங்கள் படத்தின் பலத்தை குறைத்துள்ளது.

ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவு அழகாக உள்ளது. துள்ளலான இசை கொடுத்து கதையை ஜாலியாக நகர்த்த உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.

லாஜிக் பார்க்காமல் மேஜிக் எதிர்பார்க்கும் ரசிகர்களை திருப்திபடுத்தி உள்ளார் இயக்குனர் மனோஜ் தாமோதரன்.