நரிக்குறவராக யோகி பாபு... 'குருவிக்காரன்' படத்தின் போஸ்டர் வெளியீடு...!

யோகி பாபு நரிக்குறவராக நடித்துள்ள ‘குருவிக்காரன்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

காமெடி நடிகராக கலக்கும் யோகி பாபு, அவ்வப்போது நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து தன்னை ஒரு நல்ல நடிகராகவும் நிரூபித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்து வெளியான மண்டேலா, லக்கி மேன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘குருவிக்காரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் யோகி பாபு நரிக்குறவராக நடிக்கிறார். ராக் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கே.வி.கதிர்வேலு இயக்குகிறார்.

பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பெயரை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு இன்று அறிவித்துள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் யோகி பாபு ‘மிஸ் மேகி’ என்ற படத்தில் வயதான பெண்மணி வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.