தில்லு இருந்தா போராடு: சினிமா விமர்சனம்
நடிகர்: கார்த்திக் தாஸ் நடிகை: அனு கிருஷ்ணா  டைரக்ஷன்: எஸ்.கே.முரளிதரன் இசை: சாய் தர்ஷன் ஒளிப்பதிவு : விஜய் திருமூலம்

கிராமத்தில் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் கார்த்திக் தாஸ் நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றுவதோடு பணக்கார வீட்டு பெண் அனு கிருஷ்ணாவை பார்த்து காதல் வயப்படுகிறார்.

அனு கிருஷ்ணாவோ காதலை ஏற்க மறுத்து பலமுறை அவமானப்படுத்துகிறார். ஆனாலும் விடாது துரத்தி காதலை ஏற்க நிர்ப்பந்திக்கிறார்.

ஒருகட்டத்தில் அனுகிருஷ்ணாவுக்கும் காதல் வருகிறது. இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் சாதிக்க கார்த்திக் தாஸ் வேலை தேடி அலைகிறார். கிடைக்கவில்லை.

அதன்பிறகு கார்த்திக் தாஸ் எடுக்கும் முடிவால் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டன. குடும்பத்தினர் காதல் ஜோடியை ஏற்றுக் கொண்டார்களா? என்பது மீதி கதை..

கார்த்திக் தாஸ் துறுதுறுவென வந்து முரட்டுத்தனமான காதலில் தீர்க்கமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நாயகியை விரட்டி விரட்டி காதலிப்பது சுவாரசியம். நடனமும் நன்றாக வருகிறது. இடைவேளைக்கு பிறகு இன்னொரு இளகிய மனம் காட்டி கதாபாத்திரத்தை வலுவாக்கி உள்ளார்.

அனுகிருஷ்ணாவுக்கு கதையில் முக்கிய கதாபாத்திரம். அதை அழகாக ரசித்து செய்து இருக்கிறார். காதல் தொல்லை கொடுக்கும் நாயகனை அடித்து விரட்டி ஆவேசம் காட்டி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

வனிதா விஜயகுமார் வில்லன்களை மிரட்டும் துணிச்சலான பெண்ணாக வருகிறார். யோகிபாபு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், ஆகியோர் சிரிக்க வைக்கும் வேலையை செய்துள்ளனர்.

சாய் தர்ஷன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். விஜய் திருமூலம் கேமரா கிராமத்து அழகை நேர்த்தியாக படம் பிடித்து உள்ளது.

அத்துமீறும் நாயகன் மீது நாயகிக்கு திடீர் காதல் வருவதில் லாஜிக் இல்லை.

வாழ்க்கையில் கல்வி முக்கியம் என்பதை காதல் சென்டிமெண்ட் பின்னணியில் சொல்லி சமூக அக்கறையோடு படத்தை எடுத்துள்ளார். இயக்குனர் எஸ்.கே.முரளிதரன்.