தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து ரணகளம் செய்த ரசிகர்கள்.. அட்வைஸ் செய்த சல்மான் கான்

சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள ‘டைகர் 3’ நேற்று திரையரங்குகளில் வெளியானது.

நாசிக்,

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஏக் தா டைகர்’. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் ‘டைகர் ஜிந்தா ஹே’ திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதன் மூன்றாம் பாகமாக தற்போது ‘டைகர் 3’ உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றதோடு ஒரே நாளில் சுமார் ரூ.40 கோடி வசூலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் உள்ள ஒரு திரையரங்கில் டைகர் 3 படம் பார்க்க வந்த ரசிகர்கள், நடிகர் சல்மான் கானின் என்ட்ரியை கொண்டாடும் விதமாக திரையரங்கத்திற்குள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். பட்டாசுகள் நாலாபுறமும் சீறிப் பாய்ந்ததால், இருக்கைகளில் இருந்த மக்கள் பயந்து அலறினர். அதனால் திரையரங்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று இரவு மாலேகான் சாவ்னி பகுதியில் உள்ள மோகன் சினிமாவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, என்றும் தெரிவித்தார்.

ரசிகர்களின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சல்மான் கான், “டைகர் 3 படம் திரையிடப்பட்டபோது திரையரங்கினுள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. நமக்கும் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை பார்த்து ரசியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.