சிவகார்த்திகேயனை பாராட்டிய அருண் விஜய்..!

சிவகார்த்திகேயன் மற்றும் மாவீரன் படக்குழுவினரை பாராட்டி நடிகர் அருண் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் கடந்த ஜூலை 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியான இந்த படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘மாவீரன்’ திரைப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மாவீரன் படக்குழுவினரை பாராட்டி நடிகர் அருண் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “மாவீரன் படம் பார்த்தேன். முழுமையாக ரசித்தேன். சிவகார்த்திகேயன் பிரதர் நிதானமாக அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளீர்கள். யோகிபாபு மற்றும் விஜய்சேதுபதி பிரதரின் குரல் பிடித்திருந்தது. சிறந்த பணிக்காக இயக்குனர் மடோன் அஷ்வின் மற்றும் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.