சினிமா விமர்சனம் - கருமேகங்கள் கலைகின்றன
நடிகர்: பாரதிராஜா,கவுதம் மேனன்,யோகிபாபு நடிகை: அதிதி பாலன்,மஹானா சஞ்சீவி  டைரக்ஷன்: தங்கர்பச்சான் இசை: ஜி.வி.பிரகாஷ் 

ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிராஜா. இவரது மூத்த மகனும் மகளும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். வக்கீலான இளைய மகன் கவுதம் மேனன் இல்லத்தில் அந்திமக் காலத்தை கழிக்கிறார்.

பண ஆசை காரணமாக அநியாயத்தின் பக்கம் கவுதம் மேனன் நிற்பதை பார்த்து வெம்பும் பாரதிராஜா பல ஆண்டுகளாக அவருடன் பேசுவதை நிறுத்திக் கொள்கிறார்.

அவரை பிள்ளைகள் கவனிப்பதும் குறைகிறது. இதனால் தன்னைத் தேட வேண்டாம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அவரை காணாமல் குடும்பமே பதறுகிறது.

பாரதிராஜா ஏன் அந்த முடிவை எடுத்தார்? வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதி படம்.

ஒய்வு பெற்ற நீதிபதி கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார் பாரதிராஜா. நேர்மையாக கடமையை செய்வது, அன்புக்காக ஏங்குவது, செய்த குற்றத்துக்காக பரிதவிப்பது என சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஓராயிரம் உணர்வுகளை மிக இலகுவாக வெளிப்படுத்தி கலங்கடித்துவிடுகிறார். மன்னிப்பு கேட்கும் காட்சி மனதை உலுக்குகிறது.

வக்கீல் கதாபாத்திரத்தை உடல்மொழி மூலம் மெருகேற்றியிருக்கிறார் கவுதம் மேனன். பணம் முக்கியம் என்று அலைவது பிறகு அப்பா, குடும்பம் மீது பாசம் கொள்வது என நுண்ணிய உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி கவனிக்க வைத்துள்ளார்.

அதிதி பாலனுக்கு காவல் அதிகாரி, ஆசிரம நிர்வாகி என பல பரிமாணங்கள். அதை அவரும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் கதாபாத்திரத்துக்கு நேர்மை செய்திருக்கிறார்.

சுமைதாங்கி போன்ற கதாபாத்திரத்தை தன்னுடய பண்பட்ட நடிப்பால் அலங்கரித்துள்ளார் யோகிபாபு. மகளுக்காக ஏங்குவது, அவமானங்களை சந்திப்பது என அவருடைய கதாபாத்திரம் மனதைத் தொடுகிறது.

மஹானா சஞ்சீவியும் கதாபாத்திரத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் நடித்திருப்பது சிறப்பு.

எஸ்.ஏ.சந்திரசேகரன், டெல்லி கணேஷ், ஆர்.வி.உதயகுமார் போன்ற துணை பாத்திரங்களும் கதையை நகர்த்த உதவியுள்ளது.

சில இடங்களில் மெதுவாக நகரும் காட்சிகள் குறையாக இருந்தாலும் அதையும் மீறி கதைக்குள் இருக்கும் ஜீவன் இதயத்தை ஈர்க்கிறது.

ஏகாம்பரத்தின் கேமரா நீர், நிலம், காற்று, வானம் என இயற்கையின் மொத்த அழகையும் அள்ளிக்கொண்டு வந்துள்ளது

ஜி.வி.பிரகாஷின் இசை நெஞ்சோடு கலந்து உறவாடுமளவுக்கு கதையில் இரண்டற கலந்துள்ளது. கவிஞர் வைரமுத்துவின் ‘தெய்வத்த எனக்கு காட்டிய தெய்வம்’.’செவ்வந்திப் பூவே’..பாடல் வரிகள் படம் பார்த்த பிறகும் காதில் ரீங்காரமிடுகிறது.

வாழ்ந்து முடித்தவர், அன்புக்காக ஏங்குபவர் என இரண்டு கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக அற்புதமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் தங்கர்பச்சான்.

மனிதனின் நிஜமான தேவை எது? எதற்காக வாழ வேண்டும்? போன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கு கதை மாந்தர்களை வைத்து மிக அழகாக காட்சிபடுத்தியதில் இந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ உயிரோட்டமான திரை காவியமாக வியக்க வைக்கிறது.