"எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது" படப்பிடிப்பில் லேசான காயம் அடைந்த நிலையில் நடிகர் சூர்யா பதிவு!

‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் ‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததாகவும் இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா, தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

“அன்பிற்குரிய நண்பர்கள், அன்பான ரசிகர்களே..! நான் விரைவில் குணமடையவேண்டி நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு மனமார்ந்த நன்றி. எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது. உங்களின் அன்பிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.