இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு '2018' மலையாள படம் தேர்வு

மலையாளத்தில் தயாரான ‘2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ’ என்ற படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வாகி உள்ளது.

உலகளவில் சிறந்து விளங்கும் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்புவதற்கான படத்தை தேர்வு செய்ய கிரிஷ் கசரவல்லி தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த பரிந்துரை குழுவுக்கு தமிழில் ‘விடுதலை’, ‘வாத்தி’, ‘மாமன்னன்’, ‘ஆகஸ்டு 16, 1947’ ஆகிய 4 படங்கள் அனுப்பப்பட்டன. இதேபோல மலையாளம், தெலுங்கு, இந்தி, மராத்தி மொழி படங்கள் என மொத்தம் 22 படங்கள் அனுப்பப்பட்டன.

இதில் மலையாளத்தில் தயாரான ‘2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ’ என்ற படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வாகி உள்ளது. இதனை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவர் ரவி கொட்டாரக்கரா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய இந்த படத்தில் டோவினோ தாமஸ், தன்வி ராம், குஞ்சாக போபன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

கடந்த மே மாதம் கேரளாவில் வெளியான இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. மலையாளத்தில் அதிக வசூல் குவித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.

2018-ம் ஆண்டு கேரளாவை உலுக்கிய மழை வெள்ள பாதிப்பை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. மழை வெள்ளத்தில் இயல்பு வாழ்க்கையை தொலைத்த மக்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இந்த வருடம் நடந்த ஆஸ்கார் விருது விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் விருது பெற்ற நிலையில் ‘2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ’ படம் விருது பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.