"இது மிகவும் மோசமான செயல்"- திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி!

தனது திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கோழிக்கோடு,

பிரபல நடிகையான சாய் பல்லவி தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய்பல்லவியும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை கிராப் செய்த சிலர் இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நான் வதந்திகளை கண்டுகொள்வது இல்லை, ஆனால் குடும்பத்தை போன்று இருக்கும் நண்பர்களை குறித்து வதந்திகள் பரவும் போது அதை பற்றி நான் பேச வேண்டும். என் படப்பிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே கிராப் செய்து காசுக்காகவும் அருவருப்பான நோக்கத்துடனும் பரப்பி வருகின்றனர்.

என் அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்கிறபோது இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.