இணையத்தில் வெளியானது 'லியோ' திரைப்படம்...! ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் இன்று வெளியாகி உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை பார்த்து வருகின்றனர். முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் ‘லியோ’ திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘லியோ’ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளியான முதல் நாளே முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகி உள்ளதால் சினிமா துறையினர் மற்றும் திரை ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.