'அவங்க அழகாக இல்லை என்று நீங்க எப்படி முடிவு பண்ணீங்க..?' - செய்தியாளர் கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலடி

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர் சந்திப்பில் நிறம் குறித்த நிருபரின் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர் சந்திப்பில் நிறம் குறித்த நிருபரின் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது நிருபர் ஒருவர், ‘சித்தா படத்தில் நடிகை நிமிஷா சஜயன் சிறப்பாக நடித்திருப்பார். அவர் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும் அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் அவரை தேர்வு செய்ததற்கு காரணம் என்ன..?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ‘அவங்க அழகாக இல்லை என்று நீங்க எப்படி முடிவு பண்ணீங்க..? அது உங்கள் மனநிலை, நீங்கள் அழகு என்றால் சில வரையறை வைத்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது’ என்று நிறம் குறித்து கேள்வி எழுப்பிய நிருபருக்கு பதிலடி கொடுத்தார்.