அமிதாப்பச்சனின் மூடநம்பிக்கை

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தனக்கு ஒரு விஷயத்தில் மூட நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இந்தி நடிகர் அமிதாப்பச்சனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தென்னிந்தியாவிலும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

வர்த்தக விளம்பரங்களிலும் நடிக்கிறார். தற்போது ரஜினிகாந்தின் 170-வது படம் மூலம் தமிழுக்கும் வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஒரு விஷயத்தில் மூட நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறும்போது, “எனக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம். இந்தியா விளையாடும் போட்டி எதுவாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். அந்த விளையாட்டை ஒரு மூட நம்பிக்கை காரணமாக ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்தது இல்லை.

கிரிக்கெட்டை நேசிக்கும் எனக்கு மைதானத்துக்கு போய் பார்க்க விருப்பம்தான். ஆனால் நான் ஸ்டேடியத்துக்கு சென்று பார்க்கும்போதெல்லாம் எனக்கு பிடித்த அணி தோற்றுப்போய் விடுகிறது. ஒன்றிரண்டு முறை அப்படி நடந்ததால் இனி ஸ்டேடியத்துக்கு சென்று கிரிக்கெட் பார்க்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். வீட்டில் இருந்து டி.வி.யில் பார்த்து ரசிக்கிறேன்” என்றார்.

இந்தியாவில் நடக்கும் உலக போட்டியையாவது சென்று பார்ப்பீர்களா என்று கேட்டபோது “போக விரும்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.