சுழல் (இணையத் தொடர்),Suzhal (webseries)

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் சுழல் (இணையத் தொடர்) படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Suzhal – The Vortex Web Series Review in Tamil

சுழல் இணையத் தொடர் விமர்சனம்

Production – வால் வாட்ச்சர் பிலிம்ஸ்
Direction – பிரம்மா, அனுசரண்
Music – சாம் சிஎஸ்
Artists – பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர்
Release Date – 17 ஜுன் 2022 (அமேசான் பிரைம் ஓடிடி)
Running Time – 6 மணி நேரம் 15 நிமிடம்
Total Episodes – 8 அத்தியாயங்கள்

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் முதல் முறையாக தமிழில் வெளிவந்துள்ள இணையத் தொடர் ‘சுழல்’. தமிழில் தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளைத் தவிர்த்து பல்வேறு உலக மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், சப்டைட்டில்களுடனும் வெளியாகி உள்ளது.

‘விக்ரம் வேதா’ பட இயக்குனர்களான புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், பிரம்மா, அனுசரண் இருவரது இயக்கத்தில் மொத்தம் 8 அத்தியாயங்களாக இத்தொடர் வெளிவந்துள்ளது. பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இத்தொடருக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

கோவைக்கு அருகில் மலைப் பிரதேசமான சாம்பலூர் என்ற சிறிய ஊரில் மயானக் கொள்ளை நடக்கும் 9 நாட்களில் நடந்து முடிக்கும் கதை. ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

சாம்பலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் அதன் முதலாளி ஹரிஷ் உத்தமனுக்கும், தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபனுக்கும் இடையே பகை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தொழிற்சாலையில் ஒரு இரவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்படுகிறது. பார்த்திபன்தான் தீ வைத்திருப்பார் என அவரைக் கைது செய்ய வேண்டும் என இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டியிடம் ஹரிஷ் உத்தமன் நெருக்குதல் தருகிறார். அதே நாளில் பார்த்திபனின் 15 வயது மகள் காணாமல் போய்விடுகிறார். இது பற்றிய விவரம் தெரிய வந்ததும் பார்த்திபனின் மூத்த மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் கோவையிலிருந்து சாம்பலூருக்கு வருகிறார். ஒரு பக்கம் தொழிற்சாலை தீ விபத்து பற்றி விசாரணை நடக்க, மறு பக்கம் காணாமல் போன பார்த்திபனின் மகளைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையும் நடக்கிறது. பலப்பல திருப்பங்களுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘சுழல்’ தொடரின் கதை.

இதுவரையில் வெளிவந்துள்ள இணையத் தொடர்களை மிஞ்சும் அளவிற்கு இதன் தரம் மிக உயர்வாக இருக்கிறது என பார்ப்பவர்கள் அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு நிறையவே மெனக்கெட்டு இத்தொடரை உருவாக்கியிருக்கிறார்கள். அதிலும் மயானக் கொள்ளை நடக்கும் அந்த 9 நாள் திருவிழாக் காட்சிகளை எப்படி படமாக்கினார்கள் என்று வியக்க வைக்கிறார்கள். திருவிழா நடந்த போதே படமாக்கினார்களோ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அந்தக் காட்சிகள் அமைந்துள்ளன.

கதை, திரைக்கதை ஒரு பக்கம் என்றால், கதாபாத்திரங்களுக்கான தேர்வு அவ்வளவு பொருத்தமாய் அமைந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாமே இந்த சுழலுக்குள் சிக்கும் அளவிற்கான காட்சியமைப்புகள் தொடர் முழுவதும் உள்ளது. இயக்குனர்கள் பிரம்மா, அனுசரண் இருவருமே தங்களது கடும் உழைப்பை இத்தொடருக்காகக் கொடுத்திருக்கிறார்கள்.

இத்தொடரின் நாயகன், நாயகி என யாரையும் தனிப்பட்டு சொல்ல முடியாது. பலருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். தொழிற்சங்கத் தலைவராக, இரண்டு பெண் குழந்தைகளின் அப்பாவாக பார்த்திபன். சினிமாவில் கூட இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருக்க மாட்டார். அவருடைய வழக்கமான நக்கல், நையாண்டிகள் இல்லாத ஒரு யதார்த்தமான கதாபாத்திரம்.

பார்த்திபனின் மூத்த மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ். சொந்த ஊரைவிட்டு கோவைக்குச் சென்று அங்கு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர். தங்கை காணாமல் போன தகவல் கிடைத்ததுமே ஊருக்குத் திரும்பி, தங்கையைக் கண்டுபிடிக்க அவரும் முயற்சியில் இறங்குகிறார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தனி முத்திரை பதித்த ஐஸ்வர்யா, இந்தத் தொடரிலும் தன் தனி முத்திரையை அழுத்தமாய் பதித்துள்ளார்.

‘திமிரு’ படத்திற்கப் பிறகு ஸ்ரேயா ரெட்டிக்கு அவ்வளவு பொருத்தமான ஒரு கதாபாத்திரம். ஒரு பெண் இன்ஸ்பெக்டர் எப்படி இருப்பார் என்பதை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். நடையில் ஒரு கம்பீரம், பேச்சில் ஒரு திமிர், மகன் என்று வந்ததும் பாசம் என அசத்துகிறார். நடுவில் சில காலம் ஏன் நடிக்காமல் போய்விட்டார் என்ற கேள்வியை எழுப்புகிறது அவரது நடிப்பு. தொடர்ந்து நடியுங்கள், ஸ்ரேயா என்று ரசிகர்களை சொல்ல வைப்பார்.

சப் இன்ஸ்பெக்டராக கதிர். இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டிக்கு வலது கரமாக இருக்கிறார். தொழிற்சாலை தீ விபத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும் போது, அது பார்த்திபனின் மகள் காணாமல் போன வழக்காகவும் திசை மாறுகிறது. அந்தப் பெண்ணை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என சிரமம் பார்க்காமல் குற்றவாளியைத் தேடி ஓடுகிறார், ஓடுகிறார், ஓடிக் கொண்டே இருக்கிறார். கடைசியில் சரியாகவும் கண்டுபிடித்து விடுகிறார். சர்க்கரை கதாபாத்திரத்தில் இனிக்க, இனிக்க நடித்திருக்கிறார்.

கதிரின் காதலியாக நிவேதிதா சதீஷ், பார்த்திபனின் இளைய மகளாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ், ஸ்ரேயா ரெட்டியின் மகனாக நடித்திருக்கம் எப் ஜே, ஸ்ரேயாவின் கணவராக நடித்திருக்கும் பிரேம் குமார். தொழிற்சாலை முதலாளியாக நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கோபிகா, எப் ஜே இடையிலான நெருக்கமான காதல் காட்சிகளை கண்டிப்பாகத் தவிர்த்திருக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் வயதுடைய இவர்களது காதல் காட்சிகள், முத்தக் காட்சிகள் அந்த வயதுடையவர்களை தவறாக வழி நடத்தக் காரணமாக அமைந்துவிடும்.

திருவிழா காட்சிகளுக்காக கலை இயக்குனர் அருண் வெஞ்சரம்மூடு, ஒளிப்பதிவுக்காக முகேஷ், படத் தொகுப்பிற்காக ரிச்சர்ட் கெவின், பின்னணி இசைக்காக சாம் சிஎஸ் தங்களது ஈடுபாட்டான உழைப்பைக் கொடுத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

தரமான ஒரு இணையத் தொடரைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கியவர்களுக்கு இத் தொடர் நல்ல ரசனையைத் தரும்.

Reference: Cinema Dinamalar